சவூதி அரேபியாவும், ஈரானும் இரகசியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனவா?

மத்திய கிழக்கின் வஞ்சம் பொருந்திய இரண்டு சக்திகளான சவூதி அரேபியாவும் தற்போதைய நிலையில் பல அரசியல் சர்ச்சைகளுக்கான, போர்களுக்கான பின்னணிகளில் மறைந்திருக்கும் பொம்மலாட்டக்காரர்களாகும். மத்திய கிழக்கில் தனது ஆதிக்கமே இருக்கவேண்டுமென்ற நோக்கில் இயக்கிவரும் அவ்விருவரும் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது என்பது பலருக்கும் நல்ல செய்தியாகவே இருக்கும். 

ஏப்ரல் 9ம் திகதி இவ்விரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் பாக்தாத்தில் சந்தித்துக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகின்றன. ஈரானால் இயக்கப்படும் யேமனின் ஹூத்தி இயக்கத்தினரின் சவூதி அரேபியா மீதான தாக்குதல்கள் பற்றியும், அவைகளை நிறுத்துவது பற்றியுமான எண்ணங்களில் இப்பேச்சுவார்த்தைகளுக்கான வித்துகள் ஊன்றப்பட்டதாகத் தெரிகிறது. சமீபத்தில் ஹூத்தி இயக்கத்தினரின் தாக்குதல்கள் யேமனில் சவூதி நியமித்திருக்கும் அரசுக்குப் பெருந்தொல்லைகள் கொடுத்து வருகின்றன. இன்னொரு பக்கத்தில் அவை சவூதியின் எரிநெய் எடுக்கும் தளங்கள் மீதும் தாக்கிக் கடும் சேதங்களை விளைவித்து வருகின்றன.

அணுசக்தி அபிவிருத்தி பற்றிய ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்த்துக்கொள்வது பற்றிய பேச்சுவார்த்தைகளைச் சவூதி அரேபியா எதிர்த்து வருகிறது. அதே சமயம் சவூதி அரேபியா அமெரிக்காவின் நல்லெண்ணத்தையும் எதிர்பார்த்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இரண்டு பகுதியாருக்கும் மத்திய கிழக்கில் மோதிக்கொள்வதை நிறுத்தும்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் இந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதாகக் கணிக்கப்படுகிறது. ஆனால், இப்பேச்சுவார்த்தைகள் நடந்ததைச் சவூதியும், ஈரானும் இதுவரை மறுத்து வருகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *