கனடாவின் அழகிய கிழக்குக் கரை|மார்க்கோணி வானொலி அலைகளை பரீட்சித்து வெற்றிகண்ட இடம்| வெற்றிநடை உலாத்தல்

கனடாவின் கிழக்குக்கரையில் மலையும் கடலும் சார் இயற்கையாகவே அழகான  பகுதியாக விளங்கும் சிக்னல் ஹில் (St John’s Signl Hill) பகுதிக்கு இன்றைய வெற்றிநடை உலாத்தல் பயணிக்கிறது. அங்கு இருக்கும் புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் தன் உயர்கல்விக்காக ஒரு சில வருடங்கள் வாழ்ந்த பாரதி சிவச்சந்திரன் அந்த வரலாற்று பிரசித்தமான குன்றில் உலாத்திய இங்கே அனுபவங்களை பகிர்கிறார்.

சிக்னல் ஹில் பல நூற்றாண்டுகாலங்களுக்கு முன்பிருந்தே வரலாற்றுப்பின்னணியை கொண்ட இடமாகும்.

கனடாவைச் சேர்ந்த பெரிய தீவான நியூபவுண்ட்லாந்தை நோக்கி உயர்ந்திருக்கும் குன்று தான் சிக்னல் ஹில். இக்குன்றின் அதி உயரமான இடம் சுமார் 167 மீற்றர் உயரமுள்ளது. குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக்குள் ஒரு அருங்காட்சியகமும் அதன் அருகில் ஒரு பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குன்றின் சரிவில் பற்றரி என்ற நகரம் அதன் நேர்கீழேயுள்ள துறைமுகத்தைப் பார்த்தபடி இருக்கிறது. அங்கிருக்கும் கைவிடப்பட்ட கட்டடமொன்றில்தான் மார்க்கோணி அத்லாந்திக் கடலுக்கு அடுத்தபக்கம் இங்கிலாந்திலிருந்து முதலாவது வானொலி அலைத் தொடர்பைப் பெற்றார். 

குன்றின் அடிப்பகுதியில் நியூபவுண்ட்லாந்து, லப்ரடோர் பல்கலைக்கழகத்தின் ஒரு கிளை இருக்கிறது. குன்றிலமைக்கப்பட்டிருக்கும் ஜோன்சன் ஜியோ செண்டர் அருங்காட்சியகத்தை அவர்களே இயக்கி வருகிறார்கள்.

பிரெஞ்சுக்காரருக்கும் பிரிட்டிஷ்காரருக்குமிடையே நடந்த வட அமெரிக்காவுக்கான ஏழு வருடப் போரின் இறுதிக் கட்டம் 1762 இல் சிக்னல் ஹில்லில் தான் நடந்தது. அப்போரில் தோற்றுப்போன பிரெஞ்சுப் படைகள் செயிண்ட் ஜோனை பிரிட்டிஷ்காரரிடம் ஒப்படைத்தன என்பதும் வரலாறு. 

1897 இல் சிக்னல் ஹில்லின் உச்சியிலிருக்கும் Cabot Tower கட்டப்பட ஆரம்பித்தது. அதற்கு 400 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவின் பகுதிகளைத் தேடவந்த ஜோன் கபொட் இங்கே கரையேறியதை ஞாபகப்படுத்துவதற்காக அது கட்டப்பட்டது. அதே சமயம் விக்டோரியா மகாராணி ஆட்சியின் 50 வருடத்தையும் நினைவுகூருகிறது. மார்க்கோணி தனது கம்பியில்லாத் தொலைத்தொடர்பு அலைகளை அத்திலாந்திக் சமுத்திரத்தின் அடுத்த பக்கத்திலிருந்து பெற்றுக்கொண்டதைப் பற்றிய விபரங்கள் கொண்ட காட்சிசாலையும் அந்தக் கோபுரத்தினுள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குழர்தைகளும் பெரியவர்வர்களும் இந்த பகுதிக்கு உலாத்தப் போனால் வரலாற்று அம்சங்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் இதமான மகிழ்வூட்டக்கூடிய இடமாகவும் இது விளங்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *