சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல முன்!
அனைத்துலகத்திற்கு செய்தி சொல்ல முனைபவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகக் கவனிக்கவேண்டும்.
அந்த சர்வதேசத்திற்கு பல காதுகளும் உண்டு. பல கைகளும் உண்டு.
அதன் மதிப்பீடுகள், அறம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் எல்லாம் இடத்துக்கு இடம் மாறும்.
‘அது ஏனுங்க?’ என்று கேட்டால், ‘இராஜதந்திரம், மூலோபாயம், தந்திரோபாயம், நாட்டு நலன்’ என்கிற பதில்கள் அடுக்கடுக்காக வரும். இத்தகைய சொற்களை ஆய்வு செய்வதற்கு பல அரச சார்பற்ற -ஆனால் அதன் நிதியில் இயங்கும் நிறுவனங்கள் உள்ளன.
இவைதவிர உலக நாடுகளில் பல கூட்டுக்களும் உண்டு என்கிற விடயம் எம்மில் பலருக்குத் தெரியும்.
பொருளாதாரக் கூட்டு, இராணுவக்கூட்டு, இராணுவ-பொருளாதாரக்கூட்டு, நாடுகள் ஒன்றிணைந்த ஒன்றிய கூட்டு.
எண்ணெய்க்கூட்டு, எண்ணெய்+கூட்டு, பிராந்தியக்கூட்டு, 195 நாடுகளும் இணைந்த சாம்பார் கூட்டு, மனித உரிமை பேசும் நாடுகளின் கூட்டு, குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட தனிக்கூட்டு என பல வகைகள் உண்டு.
ஆகவே சர்வதேசம் என்பது முரண்பட்ட கூட்டுக்களின் சங்கமிப்பு என்று கூறுவதே சிறந்தது.
இரண்டு கண்களுக்குப் பக்கத்தில் தடுப்புக்களைப் போட்டவாறு உலகத்தை முழுமையாகப் பார்க்க முடியாது.
உலகப் பொருளாதாரத்தின் அசைவியக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் பூகோள அரசியல் மாற்றத்தை முழுமையாக தெரிந்து கொள்வது கடினம்.
சீனாவிற்கெதிராக பிலிப்பைன்சை உசுப்பிவிடும் அமெரிக்காவின் பின்புலத்தில், Nickel என்ற கனிமத்தின் தேவை உண்டு.
மின்சாரக் கார் உற்பத்தியில் அதன் பங்கு உண்டு.
தற்போது சீன மின்சாரக்காருக்கு 100% வரிவிதித்துள்ளார் பைடன்.
ஏனிந்தக் கோபம் என்று கேட்டால், ‘மிகை உற்பத்தி, அதிகளவிலான சீனஅரச சலுகை’ என்பார் அவர்.
Samsung மற்றும் தைவானின் TSMC ஐ அச்சுறுத்தி அமெரிக்காவில் ஆலையைப் போட வைத்த அதிபர் பைடன் , அதற்கு கொடுத்த சலுகைகள், முதலீட்டில் உதவி செய்தமை குறித்த கேள்விகளை சீனர்கள் தற்போது முன்வைக்கிறார்கள்.
இந்தப் பொருளாதார போட்டியில் நாணயப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்பப் போர், சைபர் தாக்குதல் யாவும் இணைந்து வரும்.
அதன் உச்சநிலையில் ஆயுதப்போர் மூழும். 1929 இன் பொருளாதார வீழ்ச்சியை ,1945 இல் பெரும்போராகக் கண்டது இவ்வுலகம்.
2008 இன் வீழ்ச்சி ,இன்றளவில் தடைகளின் உச்சத்தை நோக்கி நகர்ந்து உலகப்போராக மாறாமல் இருந்தால் மானுட குலத்திற்கு நல்லது.
ஆனாலும் அதனை கார்ப்பரேட் உலகமே தீர்மானிக்கும் என்பது இயங்கியல் விதி.
அணுஆயுத நாடுகள் தமக்கிடையே மோதும் போது அதிக வரிவிதிப்பு, பொருளாதார தடை, சொத்து முடக்கம் போன்ற ஆயுதங்களையே பயன்படுத்துகிறது.
இவ்வகையான அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, உலக ஒழுங்கும் மாறும். புதிய கட்டமைப்புகளும் உருவாகும்.
அடிப்படையில், சந்தைக்கான போட்டியும், உற்பத்திறன் அதிகரிப்பும், அதீத தொழில்நுட்ப வளர்ச்சியும், சில நிறுவனங்களின் சந்தை மதிப்பினை உயர்த்தியுள்ள Cloud Capital உம், படைத்துறை விரிவாக்கமும், நவீன இருதுருவ உலக ஒழுங்கினை தற்போது தீர்மானிக்கின்றன.
சந்தை மதிப்பில்,Amazon, Microsoft, Apple, Nvidia, Alphabet, Facebook,TSMC போன்ற கம்பனிகள் 2 ரில்லியனை கடந்து விட்டன.
ஆகவே நாம் சர்வதேசத்திற்கு செய்தி சொல்வதானால், இந்த நுட்பமான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களை கற்றுணர வேண்டும்.
ஆகவே இது குறித்து பேசுவோம். விவாதிப்போம்.
எழுதியது: இதயச்சந்திரன்