தமிழ் மக்கள் பொதுச்சபை உடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்
பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் விவாதித்த தமிழர் தரப்பின் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் நடந்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்வு யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக முக்கிய பேசுபொருளான, பொதுவேட்பாளர் குறித்த பலமட்ட கலந்துரையாடல்களின் பின்னரான செயற்பாடாக, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருக்கிறது.
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் கூடுதல் ஆசனங்களை கொண்டிருக்கும் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பங்குபெறாத ஒரு ஒப்பந்தமாகவும் இது தமிழர் தேசியப்பரப்பில் இது அமைந்திருக்கிறது.
தமிழ்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பில் சிவில் – சமூக பிரதிநிதிகளும் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்,தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன்,தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் சி. வேந்தன் குறித்த இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
அதேவேளை தமிழ் மக்கள் பொது சபை சார்பில்அரசியல் சமூக செயற்பாட்டாளரான த. வசந்தராஜா, அரசியல் விமர்சகர் அ ஜோதிலிங்கம், பேராசிரியர் கே ரீ கணேசலிங்கம்,இராசலிங்கம் விக்னேஸ்வரன்,அரசியல் விமர்சகர் ஏ ஜதீந்திரா,அரசியல் விமர்சகர் நிலாந்தன் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கியே தமிழ்மக்களின் அபிலாஷைகளை மீண்டும் பறைசாற்ற முடியும் என தெரிவிக்கும் இரு தரப்புகளும் இணைந்து இணக்கம் கண்டுஇந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இருப்பினும் கட்சிகள் சார்ந்து கட்சிகளுகிடையே இருக்கும் நம்பிக்கையற்ற தன்மைகளை நிவர்த்திசெய்து செயற்படு தன்மையை விரைவுபடுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.