எட்டய புரத்து மன்னன்..!

📖📖📖📖📖📖📖📖📖📖📖

பாரதியார்
நினைவு தினக் கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

📖📖📖📖📖📖📖📖📖📖📖

அன்று
எல்லோரும்
நினைத்திருப்பார்கள்
சின்னாசாமியாருக்கும்
இலக்குமி அம்மாளுக்கும்
சுப்பிரமணியன் என்ற
ஒரு “வாரிசு”பிறந்ததாக
பிறந்தது வாரிசு அல்ல
ஒரு “வரலாறு”…… !

1982 செப்டம்பர் 11 இல்
தமிழ் தாய்க்கும் “பாரதி”என்ற
ஒரு “பாலகன்” பிறந்தான்…

அட….! ஒருவருக்கு
இரட்டைக்குழந்தை பிறக்கும்
இது எப்படி
இரட்டியருக்கு
“ஒரு குழந்தை” பிறந்தது…?

நீ பிறக்க எட்டையாபுரம்
என்ன தவம் செய்ததோ?
நாளை
பட்டித்தொட்டி எல்லாம்
அதன் பெயர்
உச்சரிக்கப் போகும் ஆசையில்…

ஐந்து வயதில்
அன்னையை இழந்தாய்
ஏழு வயதில்
கவிதை பாடும்
ஆற்றலைப் பெற்றாய்…
‘ஒன்றை இழந்து தான்
ஒன்றைப் பெற முடியும்’ என்பது
உன் வாழ்க்கையில் மீண்டும்
நிரூபிக்கப்பட்டதோ…..?

உனக்கு
பதினொரு வயதில்
எட்டையாபுரம் மன்னன்
“பாரதி” பட்டத்தைச் சூட்டினான்….
சாதிக்க
வயதில்லை என்பதற்கு
நீ இன்னொரு சாட்சியோ….?

பதினொரு வயதில்
குழந்தையாய் இருந்த நீ…
ஏழு வயது
குழந்தையாய் இருந்த
செல்லம்மாளை
திருமணம் செய்து
இரு குழந்தைகளை
பெற்றாய்
அதனால்தான்……
குழந்தை திருமணத்தை எதிர்த்து
புரட்சி கவிதை செய்தாயோ….?

காசியில் சில காலம்
தங்கி இருந்தாய்
அங்கு
“ஞானம்” பெற வேண்டும் என்று
காலம் நினைத்ததோ….?

அங்கிருந்து
வந்த போது தான்
உனக்கு
சுதந்திர தாகம் எடுத்தது…..

எதிரிகளை மிதித்தும்
வாரி அடித்தும்
கிழித்தும்
போர் செய்யும்
யானையைப் போல் அல்லவா
உன் கவிதைகள்
சுதந்திரப் போராட்ட களத்தில்
போர் செய்தது…..!!!

இந்தியா
பாலபாரதம் இதழ்களில்
வெளிவந்த
உனது கவிதைகளும்
கட்டுரைகளும்
விடுதலை போராட்டத்திற்கு
“உரமாக” அமைந்தது…..

இந்திய மக்களைப்
பயப்படுத்திக் கொண்டிருந்த
ஆங்கிலேயர்களின்
துப்பாக்கியும்
பீரங்கையும்
முதன் முதலாகப் பயப்பட்டது
உனது “எழுதுகோலுக்கு…..”

உன்னை
எலி என்று நினைத்து
கூண்டில் அடைக்க
நினைத்தனர்
நீ புலி என்பதை உணராமல்….

“ஆங்கில ஓநாய்களுக்கு
அஞ்சி புதுவையில் நீ தலைமறைவானதாக”
எல்லோரும் சொல்கின்றனர்….
“புலி எதையும்
வேட்டையாட முதலில்
பதுங்கி இருக்கும்” என்பதை
இந்த பாமரமக்கள்
மறந்து விட்டார்களே….?

பதுங்கி இருந்த
நேரத்தை கூட
பயனுள்ளதாக
மாற்றிக் கொண்டாய்….
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாஞ்சாலி சபதம்
அழியாத இலக்கியச்
சிற்பங்களை
அப்போதுதான்
உனது சிந்தனை உளியில்
செதுக்கினாய்…..

‘தனி ஒருவனுக்கு
உணவில்லை எனில்
சகத்தினை
அழித்திடுவோம்’ என்றாய்…
ஆனால்….இன்றோ!
தனி ஒருவனக்காக
இந்த சகத்தினையே!
அழித்துக் கொண்டுள்ளார்கள்…..

‘பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு’ என்றா…ய்
இவர்களோ
“ஃபார்” க்கு உள்ளே
நல்ல நாடு எங்கள்
பாரத நாடு’ என்று
பாடும்படி செய்து விட்டார்கள்…..

“ஆடுவோமே
பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம்” என்று
பாடி தீர்க்கதரிசியாய் வாழ்ந்தாய், ஆனால்
நாங்களோ “ஆடுவோமே
பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்தரம் அடைந்து
இந்தியாவை
தனியாருக்கு
தாரை வார்த்தோமே!” என்று பாடி
வாழ்கிறோம்….

“கடைக்கண் பார்வையை
கன்னியர் காட்டிவிட்டால்
மண்ணின் குமரனுக்கு
மாமலையும் ஒரு கடுகாகும்” என்று
காதலை உயர்த்தினாய்….
இன்று மாமலை
கடுகாகிறதோ இல்லையோ
இளைஞனின்
“மணி ஃபர்ஸ்” காலியாகிறது…..

எமன்
எல்லா உயிர்களையும் பிடிக்க வழக்கமாக
“எருமை” மேல்தான் வருவான்…
உன் உயிரைப்
பிடிக்க மட்டும் தான்
“யானை ” மேல் வந்தான்….
உன் அருமை பெருமை
எமனுக்குக் கூட
தெரிந்திருக்கிறது….
ஆனால்
என் நாட்டு மக்களுக்கு
தெரியாமல் போய்விட்டது…. இல்லையென்றால்
உனது இறுதி ஊர்வலத்திற்கு
இருபதுக்கும் குறைவானவர்கள்
வந்திருப்பார்களா….?

இருக்கும்போது
கூழ் கூட
ஊற்ற மாட்டார்கள்
இறந்த பிறகு
பால் ஊற்றுவார்கள்..
அப்படித்தான்
நீ இருந்தபோது
உனக்காக
எதுவும் செய்யவில்லை
நீ இறந்தப் பிறகு
உனக்காக
என்னென்னவோ
செய்து இருக்கிறார்கள்……

பலர் இறப்பதற்காக
வாழ்கின்றனர்…..
சிலர் வாழ்வதற்காக
இறக்கின்றனர்….
நீ வாழ்வதற்காக
இறந்த ஒருவன்…….

வாழ்க உன் புகழ்…!!!
வளர்க உன் பெருமை….!!! *கவிதை ரசிகன்*

📖📖📖📖📖📖📖📖📖📖📖

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *