வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு வருகை தந்தார் இந்தியப் பிரதமர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அநுராதபுரத்தை வந்தடைந்தார்.
வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இன்று (06) முற்பகல் அநுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றனர்.
உடமலுவவை வந்தடைந்த இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்கநாயக்க வண, பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரைச் சந்தித்து, உரையாடலில் ஈடுபட்டார்.
தான் பிறந்த குஜராத் பிரதேசத்தில் 60களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த நினைவுச்சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.
புத்த கயாவை ஆன்மீக நகரமாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அட்டமஸ்தானாதிபதி தேரர் விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அது தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் அரச பயணத்திற்கு இணையாக இந்தத் தரிசிப்பு இடம்பெற்றது.
அட்டமஸ்தானாதிபதி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், பிரித் பாராயணம் செய்து இந்தியப் பிரதமருக்கு ஆசிர்வதித்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நினைவுக் குறிப்பையும் இட்டார். மேலும், இந்தியப் பிரதமர் ஜயஸ்ரீ மகா போதி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயிலையும் திறந்து வைத்தார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளார்.




