மன்னார் நகருக்கான நேரடி இரு வழிப் பொதுப் போக்குவரத்துச் சேவையை உரிய முறையில் முன்னெடுக்க கோரிக்கை.!

மடு பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான மன்னார் நகருக்கான நேரடி இரு வழி பொதுப் போக்குவரத்துச் சேவை தொடர்பாக உரிய முறையில் இல்லாமை குறித்து மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், குறித்த கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றினைந்து மன்னாரில் இன்றைய தினம் (7) விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்தனர்.
மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் பொது செயலாளர் நடராஜா தேவகிருஷ்னன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் மடு பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான போக்குவரத்து குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதன் போது கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மடு பிரதேச பிரசித்தி பெற்ற பகுதியாக இருக்கின்ற போதிலும் மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச எல்லைப்புற கிராமங்களில் வாழும் மக்கள் மன்னார் நகருக்கான நேரடிப் பொதுப் போக்குவரத்து வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகிறார்கள்.
அரச நிர்வாக சேவையைப் பெறுவது, கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதாரம் மருத்துவ தேவைகளுக்கும், தமது உணவு, வாழ்வாதாரம் தொழில், வியாபாரம் மற்றும் உள்ளூர் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்தல் போன்ற தேவைகளுக்கும், வாடகை வாகனங்களுக்கு அதிக பணம் செலுத்தியும், பல கிலோமீட்டர்கள் நடந்தும், போக்குவரத்திற்காக ஒரு முழு நாளையும் விரயமாக்கி, பல சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்க வேண்டியுள்ளது.
மடு வலயத்தில் அதிகமான மாணவர்களின் இடை விலகலுக்கும், உயர் கல்வியை தொடர முடியாமைக்கு இந்த பொதுப் போக்குவரத்து இன்மையே முக்கிய காரணமாக இருக்கிறது.
இப்பிரச்சனைகள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இப்பிரதேசம் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதற்கு பொதுப் போக்குவரத்து இன்மையே மிக முக்கியமான காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
எனவே இப் பிரச்சனைகளுக்கு தீர்வாக,
சின்ன வலயன் கட்டில் இருந்து பரசன் குளம், விளாத்திகுளம், மண்கிண்டி, காக்கையன்குளம் மேற்கு மற்றும் கிழக்கு, கல்மடு 2. கல்மடு-3, மதீனா நகர், இரணையிலுப்பைக்குளம் சந்தி, கங்காணி குளம், முள்ளிக்குளம், கீரிசுட்டான். பாலம்பிட்டி, தட்சணாமருதமடு, பண்டி விரிச்சான், மடு, மடுச்சந்தி ஊடாக மன்னார் நகருக்கான நேரடி இருவழி பொதுப் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க வேண்டும்.
முள்ளிக்குளத்தில் இருந்து பாலம்பிட்டி வரையான திருத்தப்படாமல் (அண்ணளவாக 8km) எஞ்சியிருக்கும் பாதை புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.
03 விடத்தல் தீவு, பள்ளமடு, பாலம்பிட்டி, இரணையிலுப்பைக்குளம் சந்தி ஊடாக வவுனியாவிற்கு இருவழி பொதுப் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்க வேண்டும்.
இச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் போது மடு பிரதேசத்தில் உள்ள 50 பாடசாலைகளைச் சேர்ந்த 2500 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் இப்பகுதியில் கடமையாற்றும் ஆசிரியர்கள், அதிபர்களும், அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் நன்மை அடைவார்கள்.
மடு பிரதேசத்தில் 85 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் 4,490 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 14,200இற்கும் மேற்பட்ட மக்களும், கற்பிணித் தாய்மார்களும், முதியோர்களும், நோயாளிகளும், விசேட தேவையுடையவர்களும் நன்மை அடைவார்கள்.
முருங்கன், மன்னார், வவுனியா பகுதியில் உயர் கல்வி தொழில்நுட்ப கல்வி கற்கும் மாணவர்கள் என பலரும் நன்மை அடைவார்கள்.
எனவே எக் காரணம் கொண்டும் எமது இந்த பொதுப் போக்குவரத்துச் சேவைக்கான கோரிக்கைகளை புறக்கணிக்காது உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என அவர்கள் குறித்த ஊடக சந்திப்பின் போது தெரிவித்தனர்.