இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை – ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றனர்!

வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலைகளை, 3 கிலோ மீற்றருக்குள் வேறு பாடசாலையிருப்பின் அவற்றை மூடுவதற்குத் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கில் தற்போதுள்ள 13 கல்வி வலயங்களிலும் 981 பாடசாலைகள் இயங்குகின்றன. இந்த 981 பாடசாலைகளில் 2 இலட்சத்து 29 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கே 981 பாடசாலைகள் உள்ளபோதும் அவற்றில் 454 பாடசாலைகளில் ஒவ்வொன்றிலும் 100 க்கும் குறைந்த மாணவர்களே கல்வி கற்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதிலும் மிக மோசமான நிலைமையாக 266 பாடசாலைகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றமையும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

266 பாடசாலைகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கின்றபோதும், 3 கிலோ மீற்றர் தூரத்துக்குள் வேறு பாடசாலைகள் இல்லாத நிலை, கடல் கடந்த சூழல், விசேட தேவை என்பவற்றைக் கருத்தில்கொண்டு மூடப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் நிலையில் வடக்கில் 56 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 41 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 72 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 37 பாடசாலைகளும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வடக்கில் மூடப்படும் நிலையில் காணப்படும் 56 பாடசாலைகளிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *