ஈஸ்டர் தாக்குதல் இரகசியங்களை அம்பலப்படுத்திய பிள்ளையான்..!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “எந்த ஒரு குற்றச்செயல்களையும் எமது தரப்பு மறைக்கபோவதில்லை. அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
“அதில் குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் தெரியவந்துள்ளன. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குறிப்பிட்டது போல கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
“அவரது சமூக பதிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அவர் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதில் குறிப்பாக சிலர் உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களாக இருந்துள்ளனர். இதனடிப்படையிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது” என தெரிவித்துள்ளார்.