‘அம்புரோசுக் கொத்தனின் சாக்காலமும்|தேசக்கடவுளும்” – கதை நடை
அம்புரோசு கொத்தனின் பாதங்கள் இரண்டும் விரிந்து தொங்கின.அந்த பாதங்களானது மரத்து,உறைந்து போயிருந்தன.அவனது அன்னாக்கில் இருந்து நாக்கானது வெளியே சாடி,அதுவும் பிளந்த வாயை விட்டு நீண்டு தொங்கியது.கைகளும் அப்படியாகவே துவண்டு போய் தொங்கின.மொத்தத்தில்,அவனது சரீரத்தின் சுவாசமானது விடியகாலையிலேயே போயிருக்கலாம்.
அல்ல, அவனை அதை விட்டு முடித்து இருக்கலாம்.அந்த பழைய ஓட்டு வீட்டின் முறிக்குள்தான் அம்புரோசு கொத்தன் சடலமாய் நாண்டு தூங்கிட்டு கிடந்தான்.கிணற்று வாளி கயிறு உத்திரத்தில் இருந்து அவனை சங்கை இறுக்கியிருந்தது.அந்த முறிக்குள்தான் அவனுடைய மூத்த மொவள் எட்டாம் கிளாசு பவுளி இரவெல்லாம் பாட புத்தகங்களை படிப்பாள்.அவளுடைய புத்தக அடுக்குகளானது குலைந்தும்,சிதறியும் கிடந்தன அறை முழுக்கவும்.அவனது பாதங்கள் தொங்கியதுக்கு கீழே ஓரடக்கு பைபிள்,சின்னக் குறிப்பிடம்,தேவாலய பாட்டுப்புத்தகங்கள் எல்லாம் சரிந்து,விழுந்து கிடந்தன.அதெல்லாம் பெஞ்சாதி அமலோற்பவ மேரிக்கானது.அவளை கட்டும் போது அவளோர் பாட்டுக்காரிதான்.இன்னு வரைக்கும் அப்படிதான் அவளோட ஜீவிதம் போவுது. அம்புரோசு கொத்தன்,அமலோற்பவ மேரி கலியாணத்துக்கு பின்னணி-
கதையெல்லாம் ஒரு பாடு உண்டு.அதெல்லாம் வரபோவும் பொத்தகத்துல படிக்கலாம்! இப்போ அம்புரோசு கொத்தன் எதுக்கு இப்படி யூதாசுகாரியேத்து போல நாண்டு தூங்கி மரித்து போனான்.தக்கலை போலீசு ஏட்டு ஏனோக்கும்,இரண்டு மூணு காக்கிகளும் அவன் முற்றத்தில் நின்று அமலோற்பவத்திடம் விசாரணையை நடத்தினர்.அவள் ஒப்பாரி பாட்டோடு கையை விரிச்சு,விரிச்சு ஏதேதோ வர்த்துவானங்களை கொட்டியதை ஏனோக்கு ஏட்டு குறிச்சு கொண்டார்.தக்கலை சர்க்காரு ஆசுவத்திரி பிரேதம் கீறி கடற்கரையாண்டி லொடக்கு காக்கி நிக்கர்,சட்டையும் சகிதமாய் அங்கு வந்திருந்தான்.அவன் தூக்கில் தொங்கிய அம்புரோசு கொத்தன் சடலத்தை இறக்கி ஒரு ஓலை பாய்க்குள் வைத்து சுருட்டி கொண்டான்.அமலோற்பவமும்,அவளுடைய மூணு கொமருவளும் ஓலமாய் புலம்பினர். அம்புரோசு கொத்தன் தன்னை சாகடித்து கொள்ள அதி பயங்கர காரணங்கள் இருந்தன.அவையெல்லாம் அவனை நெடு நாட்களாய் வதை செய்னவாகையாகவே இருந்தன.அன்னாடம் அவன் உழைச்சு செறுவ,செறுவ சேத்து அஞ்சரை இலட்சம் தொகையை தக்கலை எஸ்.பி.ஐ.வங்கியில வச்சிருந்தான்.மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் இருவத்தஞ்சாயிரம் போடுவதுக்கு போன போது அந்த பணம் செல்லாது என்பதை-என்பதை அங்குள்ள அதிகாரியர் அவனுக்கு உரைத்தனர்.ஒரு கட்டிடம் சுக்கு நூறாய் உடைந்து நொறுங்குவது போல அவன் சிதறி போனான்.அந்த துயரம் அவனை கடக்காமலேயே இருந்தது நெடுநாட்களாய்.அதற்காக அரசு அவனுக்கு மது பானங்களை கொடுத்தது.குடியனாய் மாறி போனவன் பொஞ்சாதி பிள்ளைகளோடு அடிக்கடி வழக்காடல் செய்தான்.அடுத்தடுத்து அவன் வாழ்ந்த தேசத்தின் மீது தாக்குதல்கள் நடந்தேறின.கொடுநோய் எங்கும் பரவியது.அவன் அறிந்த நாலஞ்சி பேரை அது காவு கொண்டு போனது.வேல,ஜோலி எதுவும் இல்லை.குடியும்,நெருக்கடியும் அவனை நசுக்கின.அவன் வாழ்ந்த தேசத்தின் பிரதானிக்கு அவன் குறித்தோ அவனை போன்றோன்களை பற்றியோ எந்த சங்கடமும் இல்லாமல் இருந்தது.கொடு நோய் பரவிய காலகட்டத்தில் அம்புரோசு கொத்தனும் பெஞ்சாதி மக்களும் வீட்டு முற்றத்தில் நின்று கைகள் இரண்டையும் தட்டியதுண்டு.ஊரே விளக்கு பிடித்த போது அவனும்,குடும்பமும் கூட விளக்கு பிடித்தது.ஆனாலும் அந்த கொடு நோய் அவனது கண்டுராக்கின் பெஞ்சாதியையும் பலரை கொண்டு போனது.
ஆக மொத்தத்தில் அம்புரோசு கொத்தனை பேரிடி விடாமல் தாக்கியது.அவனால் இடிபாடுகளுக்குள்ளிருந்து மீளவே முடிய வில்லை. அவனது வீட்டு முற்றம் கடந்து ஒலை பாயில் சுருட்டிய அம்புரோசு கொத்தன் சடலத்தை இரண்டு,மூணு பேர் தூக்கிச் சென்றனர்.இரண்டு வீடுகள் தாண்டி அந்த ஞாயிற்று கிழமையில் வானொலியில் நாட்டின் சங்கி மங்கி பாத் கேட்டது.எப்போதோ தட்டிய அம்புரோசு கொத்தனின் கைகள் இரண்டும் சுருட்ட பட்ட ஓலை பாயை மீறி தொங்கி கொண்டிருந்தன வெளியே பரிதாபமாய்..!
எழுதுவது -ஐ.கென்னடி.