இஸ்ராயேல் சிறைகளிலிருந்து விந்து கடத்துவது பற்றிய ஜோர்டானிய சினிமா பாலஸ்தீனர்களைக் கொதிக்க வைத்திருக்கிறது.
78 வது வெனிஸ் சினிமா விழாவில் முதல் முதலாகத் திரையிடப்பட்டி இரண்டு முக்கிய பதக்கங்களைப் பெற்ற ஜோர்டானிய சினிமா “அமீரா”. அது இஸ்ராயேல் சிறைகளிலிருக்கும் பாலஸ்தீனக் கைதிகளின் விந்து கடத்தி வெளியே கொண்டுவரப்பட்டு பாலஸ்தீனப் பெண்களைக் கருவுற வைப்பது பற்றியதாகும். ஜோர்டான் அந்தச் சினிமாவை வரவிருக்கும் ஒஸ்கார் சினிமா விழாவில் “சிறந்த சர்வதேச சினிமா” என்ற வரிசையில் போட்டியிட அனுப்பப்பட்டிருக்கிறது.
இஸ்ராயேலின் சிறையில் ஆயுள் கைதிகளாக, வைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனர்கள், வழக்கே இல்லாமல் சிறைவைக்கப்பட்டிருப்பவர்கள் போன்றவர்களின் விந்தைக் களவாக வெளியே கொண்டுவந்து அவர்களின் குடும்பப் பெண்களைக் கருவுற வைப்பது நிஜத்தில் நடக்கும் ஒரு விடயமாகும். அந்த வழியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனப் பெண்கள் கருத்தரித்துப் பிள்ளை பெற்றிருப்பதாக பாலஸ்தீன இயக்கங்கள் குறிப்பிடுகின்றன.
அமீரா என்ற 17 வயதுப் பாலஸ்தீனப் பெண் சிறையிலிருக்கும் அவளது தந்தையின் விந்து மூலமாகக் கருவுறச் செய்யப்படுகிறாள். ஆனால், அவளது தந்தையின் விந்து மாற்றப்பட்டு ஒரு இஸ்ரேலியச் சிறைக் காவலாளரின் விந்தே அவளைக் கற்பமாக்கியது என்ற உண்மை அவளுக்குப் பின்னால் தெரியவருகிறது. அதுவே, அந்தச் சினிமாவின் கதையாகும். எகிப்து, ஜோர்டான் உட்படப் பாலஸ்தீனர்களும் சேர்ந்து தயாரித்த அந்த சினிமா ஜோர்டானில் படமாக்கப்பட்டிருக்கிறது.
“அமீரா,” சினிமா பாலஸ்தீனர்களை அவமானப்படுத்துகிறது, சிறையிலிருக்கும் போராளிகளை இழிவுசெய்கிறது என்று குறிப்பிட்டுப் பல பாலஸ்தீன அமைப்புக்கள் அதைத் திரையிடுவதை உடனடியாக நிறுத்துமாறு கோரியிருக்கிறார்கள். பாலஸ்தீன அரசின் கலாச்சார அமைச்சும் அச்சினிமாவை பரவ அனுமதிக்கலாகாது என்று கடுமையாக விமர்சித்திருக்கிறது.
“அந்தச் சினிமாவைப் பரப்புவது பாலஸ்தீனர்களை இழிவு செய்வதும், அவர்களுடைய சுதந்திரப் போராட்டத்துக்கு ஈனம் விளைவிப்பதுமாகும்,” என்று பாலஸ்தீனர்களின் பல அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்