“அடி சக்கை அம்மன் கோயில் புக்கை”| ஊர்நடையில் இன்று வரும் வட்டாரவழக்கு
உலகமெங்கு வாழும் தமிழ் மக்கள் அந்தந்த இடங்களில் அவர்கள் பேசும் பேச்சுவழக்குகள், உரையாடல்கள் கேட்பதற்கு ஒவ்வொரு தனித்துவமாகும். சிலவேளைகளில் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டும் மிகக்கூடுதலாக வழக்குச்சொற்களாக பயன்படுத்தபட்டு ,பின்னர் பாவனையிலிருந்து
அருகிவிடுவதும் வழமை.
அதாவது எண்பதுகளில் பேசப்பட்ட வட்டார வழக்குகள் தொண்ணூறுகளில் மாறியிருக்கும். தொண்ணூறுகளில் பேசப்பட்ட வழக்கு சொற்கள் எல்லாம் இப்ப இருக்குமோ தெரியாது.
தென்னிந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பின் ஊடாக கதாநாயகர்களும் நகைச்சுவை நாயகர்களும் சொல்லும் சொற்களில், சிலசொற்களும் வாக்கியங்களும் அவ்வப்போது வட்டாரப் பேச்சு வழக்குகளில் தொற்றிக்கொள்வதும் உண்டு.
அந்த சொற்கள் மற்றும் வாக்கியங்களும் கூட தென்னிந்தியாவின் சில இடங்களில் பேச்சு வழக்குகளில் இருப்பவை தான். திரைப்படங்களின் ஆழமான சமூகத்தாக்கம் காரணமாக ,இந்த வட்டார வழக்குச்சொற்கள் இதர மக்களின் பேச்சு வழக்குகளில் இலகுவில் தொற்றிவிடும் என்பதையும் மறுக்கமுடியாது.
அந்த வகையில் ஒவ்வொரு ஊர்களில் பேசப்படும் வட்டார வழக்குச் சொற்களையும் ஊர்நடை பகுதியில் உரையாடத் தயாராகிறது வெற்றிநடை. அவை வட்டாரச்சொற்களை ஆவணமாக்கும் முயற்சிகளில் ஈடுபடும் ஆளுமைகளோடு ஓரளவில் நாமும் கைகொடுப்பதாகவே இது அமையும் என்ற நம்பிக்கை.
“வெற்றிநடை” என்ற நிகழ்ச்சிகூட ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்து வட்டார நடைகளையும் ஊர்ப்பேச்சையும் உச்சரித்த ஒன்றுதான். அதன் தொடர்ச்சியாக இணையத்தில் அதன் பகிர்வுகளை தொடர்வதோடு இந்த விடயப்பரப்பில் ஆர்வமுள்ளோர்களின் பகிர்வுகளை இணைக்கவுமே இந்த வெற்றிநடையின் ஊர்நடை.
இண்டைக்கு(இன்று) பேசப்போவது “அடிசக்கை அம்மன் கோயில் புக்கை“.
கூடவிருக்கும் ஒருவரால் ஒரு காரியம் ஆகாது அல்லது சாதித்துவிட முடியாது என்று நினைக்க அவன் அதை விட சாதுரியமாக சாதித்து விட்டால் அப்ப சொல்லுவது தான் “அடி சக்கை அம்மன் கோயில் புக்கை”.
அதாவது நடக்க முடியாத காரியம் என்று நினைத்துக்கொண்டிருக்க
திடீரென்று நடத்திக்காட்டிவிட்டால், அது வியப்பூட்டினால் அவரைப்பார்த்து, அல்லது அந்த சம்பவத்துக்குத்தான் அப்படி சொல்லிகொல்வார்கள்.
ஒரு காலத்தில் பாடசாலைக் காலங்களில் மாணவர்கள் மத்தியில் அடிக்கடி பேசிக் கொள்வார்கள். நண்பர்கள் கலகலப்பாக இருக்கும் வேளைகளில்
கதையோடு கதையாக, பேசிக்கொள்ளும் தொனியைப் பொறுத்து
“அடி சக்கை அம்மன் கோவில் புக்கை” என்று சொல்லிக்கொள்வர். தொனி என்று குறிப்பிடுவது, “நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அதிலிருந்து வரும் மகிழ்ச்சி, தொடர்ந்து மகிழ்ச்சியின் உச்சக்கட்டம் , அந்த வேளையில் பேசுகின்ற வழக்குசொற்களில் ஒன்று தான் இது.
அப்போதும் யாராவது சாதுரியமாக சாதித்திருந்தால், அல்லது அந்த விடயங்கள் வியப்பூட்டினால் அல்லது
குறும்போடு பேசியிருந்தால் விரைவாக வாயில் முந்திக்கொண்டு “அடி சக்கை அம்மன் கோயில் புக்கை” என்றும் வரும்.
இதில் வருகின்ற “அம்மன் கோவில் புக்கை” என்பது என்ன சுவை
பொதுவாக தாயகத்தில் அம்மன் கோவில்களில் பொங்கல் பொங்குவதை மக்கள் வழமையாக கொள்வார்கள். அதில் வீடுகளில் தயாரிக்கும் பொங்கலை விட அம்மன் கோவில் பொங்கலுக்கு ஒரு தனியான சுவை இருக்கும்.அது சொல்லி வேலையில்லை.
கோவில்களில் காத்திருந்து பொங்கல் முடிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக
கையிலோ இலைகளில் சாப்பிடும் போது வரும் சுவை என்பது அலாதியானது. பொங்கலைப் பகிரும்போது பெரும்பாடுபட்டு வாங்கவேண்டும்.இதுவெல்லாம் இப்போது அன்றையநாள்கள் போல் இப்ப இருக்குமோ தெரியவில்லை. ஆனால் அந்த புக்கை சாப்பிடும்போது எல்லோர் முகங்களிலும் மலர்கின்ற புன்னகை என்பது அங்கிருக்கும் மகிழ்ச்சிக்கு எடுத்துக்காட்டு.
அந்த மகிழ்ச்சியில்,வாங்கிவிட்டோம் என்ற உற்சாகத்தில் கலகலப்பாக
பேசும்போது “அடி சக்கை என்றும் அம்மன் கோவில் புக்கை” என்றும்
சொல்வார்கள்.
இதை வாசிக்கும் உங்களுக்கும் அந்தக்காலங்கள் மீண்டும் கூடிவராதா என்ற ஏக்கம் நிச்சயம் வந்துபோகும் என்பதும் உண்மைதான்.
அம்மன் கோவில்களில் பொதுவாக பங்குனி திங்களுக்குரிய காலங்கள் தான்
கூடுதலாக இந்த பொங்கலுக்குரிய காலங்கள்.பங்குனி மாதத்தில் வரும்
திங்கட்கிழமை அம்மன் கோவில்களுக்கு பொதுவாக சிறப்பான நாள்களாக இருக்கும். இந்த பொங்கல் என்பதைத்தான் புக்கை என்பார்கள் பல இடங்களில். அந்த புக்கைதான் கோவில்களில் தனியான சுவை. அதனால் தான் அடி சக்கை அம்மன் கோவில் புக்கை என்றார்களோ தெரியாது. அப்படி தனிச்சுவை இல்லாவிட்டால் “அடி சக்கை வீட்டு குசினி புக்கை”என்றல்லவா சொல்லியிருப்பார்கள்.
அம்மன் கோவில்களில் பொங்கப்படும் பொங்கல்களில் இனிப்பானதாக இருப்பது ஒரு வகை.
அதே போல் உறைப்பாகவும் செய்வார்கள்.அனைத்து மரக்கறிகளும் இட்டு பொங்கல் பொங்குவது போல் பொங்குவது இன்னொரு வகை.
அதனை “நீர்பாளையம்” என்று சொல்வர் சிலர். ஆனால் கிராமங்கள் தோறும் வேறு சில இடங்களில் அவிசு,குழையல் சாதம், என்றெல்லாம்
வழக்குச்சொற்களாக இருப்பதும் அறியக்கிடைக்கிறது.
பங்குனி திங்கள்காலங்களில் வற்றாப்பளை அம்மன் கோயில், பன்றித்தலைச்சி அம்மன் கோவில்,கரவெட்டி அத்துளு அம்மன், வேறு பல அம்மன்
ஆலயங்களில் எல்லாம் மிகச்சிறப்பாகவே இருக்கும்.
அங்கு இனிப்பான புக்கை எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு மேல் நீர்ப்பாளையமும் இருக்கும்,
இரண்டுக்கும் தனியான சுவை.
இப்படித்தான் தாயகத்திலிருந்து இனிப்பான புக்கையின் இனிமையான நினைவுகளோடு கொழும்புக்கு வந்து புக்கை எண்டு சொன்னால் என்ன நடக்கும் எண்டு நம்மவர்கள் எல்லாருக்கும் தெரியும்.அந்தக்கதையை விட்டுவிடுவோம்.
ஆனால் கொழும்புக்கு வந்த பின்னர் எங்கு சென்றாலும் நம்மில் சிலர் “பொங்கல் பொங்கல்” என்று சொன்னாலும் , “அடிசக்கை அம்மன் கோயில் புக்கை” என்று சொல்லுவது மட்டும் எம்வாட்டார வழக்கிலிருந்து எடுத்துவிடமுடியாது என்பது மட்டும் உண்மை.
ஒரு திரைப்படத்தில்”அட்ரா சக்கை அட்ரா சக்கை” என்று நகைச்சுவையோடு பேசப்பட்டதை பலரும் திரைப்படத்தில் ரசித்திருப்பது உங்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வரக்கூடும், ஆனால் நாம் பேசும் அம்மன் கோவில் புக்கை வட்டார வழக்கின் பாவனை அம்மன்கோவில் புக்கையின் இனிப்பான சுவை தெரிந்தவர்களுக்கும் அம்மன் கோவிலை அண்டி இருந்தவர்களுக்கும் மட்டுமே கொஞ்சம் ஆழமாக தெரிந்திருக்கும். ஒரே வட்டார சொல்லமைப்பில் சக்கையும் புக்கையும் வந்ததால் இப்படியாக மக்கள் மனங்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் மொழியின் பாவனையில் வட்டார வழக்குகளாக ஒட்டிக்கொள்ளும் சொற்கள் அந்த அந்த இடங்களின் செயற்பாடுகள்,இனிமையான அனுபவங்கள், இனிப்பான விடயங்கள் என்று கால ஓட்டங்களோடு வருபவையாகத்தான் இருக்கிறது. அந்த ஓட்டங்களில் அடிக்கடி தாயகத்தில் பேசப்படும் வழக்கு சொல்லாடல் தான் “அடி சக்கைஅம்மன் கோயில் புக்கை”
எழுதுவது : கரவைக்குரல்