டென்மார்க் வழியில் சுவீடனும் கொரோனாத்தொற்று சமூகத்துக்கு ஆபத்தானதல்ல என்று அறிவித்தது.
பெப்ரவரி 05 ம் திகதி முதல் டென்மார்க்கில் போடப்பட்டிருந்த கொவிட் 19 கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அத்துடன் அவ்வியாதி “சமூகத்துக்கு ஆபத்தானது” என்ற பட்டியலிலிருந்தும் அகற்றப்பட்டது. பெப்ரவரி 09 ம் திகதி முதல் சுவீடனிலும் அதே நிலைப்பாடே செயற்பாட்டுக்கு வரும் என்று இன்று நாட்டின் பிரதமரும், மக்கள் ஆரோக்கிய அமைச்சரும், தொற்றுநோய்ப் பரவல் அமைப்பின் உயரதிகாரியுடன் ஒன்றிணைந்து கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
ஸ்கண்டினேவிய நாடுகளான டென்மார்க்கும், சுவீடனும் மேற்கண்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அதே தருணம் பின்லாந்தும், நோர்வேயும் தமது நாட்டில் நடைமுறையிலிருந்த பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் பெரும்பாலானவற்றை அகற்றுவதாக அறிவித்திருக்கின்றன.
கொவிட் 19 தடுப்பூசிகளின் வெற்றிகரமான செயற்பாடே மேற்கண்ட நிலைப்பாடுகளுக்குக் காரணம் என்று நாடுகளின் தொற்றுநோய்ப்பரவல் கட்டுப்பாடு உயரதிகாரிகளும், தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர். இந்த நாடுகளில் வயதுவந்தவர்களில் 90 விகிதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள். மூன்றாவது தடுப்பூசியும் சுமர் 75 விகிதத்தினருக்குப் போட்டிருக்கிறார்கள். டென்மார்க் தனது நாட்டின் சிறுபிள்ளைகளுக்கும் கொவிட் 19 தடுப்பூசிகளைக் கொடுத்திருக்கிறது.
“கொரோனா பெரும்தொற்று முடிந்துவிட்டதாகக் கொண்டாடாதீர்கள், ஆபத்து இன்னும் ஓயவில்லை,” என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு இதே சமயம் எச்சரிக்கிறது. ஐரோப்பாவிலும் மேலும் சில நாடுகளிலும் கொரோனாத்தொற்றால் அதிக நோய்க்குள்ளாகிறவர்கள் பெருமளவில் குறைந்து, இறப்புக்களும் குறைந்து வரும் அதே சமயம் உலகளவில் அந்த எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதே உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் எச்சரிக்கைக்குக் காரணமாகும். இந்த நோய் இனிமேல் வருடாவருடம் வெவ்வேறு திருபுகளாக வரலாம், எனவே வருடத்துக்கொரு தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுமென்றும் அவ்வமைப்பு கட்டியம் கூறுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்