டிரம்ப் மேடைப்பேச்சால் பயந்த அரச வழக்கறிஞர் ஒருவர் குற்றவியல் திணைக்களத்திடம் பாதுகாப்புக் கோரியுள்ளார்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் டெக்சாஸ் நகரில் தனது ஆதரவாளர்களிடையே தோன்றி உரை நிகழ்த்திய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை நடத்தும் அரச வழக்கறிஞர்கள் மீது தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டார். அதனால் பயந்த ஜியோர்ஜியா அரச வழக்கறிஞர் ஒருவர் தனக்குப் பிரத்தியேக பாதுகாப்புக் கோரி FBI இடம் விண்ணப்பித்திருக்கிறார்.
“கெட்ட, தீவிரவாத, இனவெறி பிடித்த வழக்கறிஞர்கள் ஏதாவது தவறுகள் செய்வார்களானால் அல்லது சட்டத்துக்கெதிராக நடப்பார்களானால் இந்த நாடு இதுவரை காணாத போராட்டங்களை வாஷிங்டன், நியூ யோர்க், அட்லாண்டா மற்றும் நகரங்களில் காணவேண்டும். ஏனென்றால், எங்கள் நாட்டின் தேர்தல் சட்டங்கள் ஊழல்கள் நிறைந்தவை,” என்று டிரம்ப் மேடையில் அறைகூவினார்.
கடந்த ஜனவரி 6 ம் திகதியன்று அமெரிக்கப் பாராளுமன்றத்தினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் மீதான நூற்றுக்கணக்கான விசாரணைகளும் வழக்குகளும் நடந்து வருகின்றன. சிலருக்கு ஏற்கனவே சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றன. தனது பேச்சின்போது அந்த வன்முறைகளில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றவர்களை, மீண்டும் தான் ஜனாதிபதியாக வந்தால் விடுவிப்பேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் வெவ்வேறு மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் மீதான வெவ்வேறு குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகள் நடந்து வருகின்றன. அவற்றில் அவரது நிறுவனத்தின் பொருளாதார விபரங்கள், வரி ஏய்ப்பு முதல் கடந்த தேர்தலின் பின்பு அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் அவருடைய விசிறிகள் நுழைந்து நடாத்திய வன்முறைகளுக்கு அவர் தூண்டுதலாக இருந்தாரா என்பது வரை அடக்கம். தவிர பாராளுமன்றத்துக்குள் நடந்த வன்முறைகள் பற்றிய அரசியல் குழு விசாரணை வன்முறையை நிறுத்துவதற்கு அவர் முயற்சிகள் எடுத்தாரா அல்லது கண்டுகொள்ளாமலிருந்து தூண்டினாரா என்றும் விசாரித்து வருகிறது.
ஜியோர்ஜியா மாநிலத்தில் ஜோ பைடன் மிகக்குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் அந்தத் தேர்தல் முடிவை மாற்றும் விதமான நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கு டிரம்ப் முயன்றாரா என்பது பற்றி வழக்கறிஞர் பன்னி வில்லிஸ் விசாரித்து வருகிறார். அவரே, தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்