“நோர்வே நிர்மாணித்திருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய காற்றாடி மின்சார மையம் பழங்குடி மக்களின் உரிமைகளை மீறுகின்றது.”
நோர்வேயின் துரொண்ட்ஹெய்ம் நகரையடுத்திருக்கும் றூவான், ஸ்டூர்ஹெய்யா பிராந்தியத்தில் மின்சாரத் தயாரிப்புக்கான 151 காற்றாடிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. நிலப்பரப்பில் படர்ந்திருக்கும் பசுமையான மின்சாரத் தயாரிப்புக் காற்றாடி மையங்களில் ஐரோப்பாவிலேயே அதுதான் பெரியது. அப்பகுதியின் பழங்குடியினரான சாமி இன மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் அது அவர்களின் உரிமைகளை மீறுவதாக நோர்வேயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட அந்தக் காற்றாடிகளை என்ன செய்வது என்று குறிப்பிடவில்லை. மின்சாரத் தயாரிப்புக்கான காற்றாடிகளை அங்கே அமைப்பதை அப்பகுதியில் வாழும், தமது துருவ மான்களை மேய்க்கும் சாமி மக்கள் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். அது பற்றிய பல ஆராய்வுகளின் பின்னர் நோர்வே அரசு 2013 இல் Fosen Vind நிறுவனத்துக்கு அதற்கான அனுமதியைக் கொடுத்தது.
நோர்வே அரசுக்கு அந்த அனுமதியைக் கொடுக்கும் உரிமையில்லை என்று சாமி மக்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்கள். வழக்கு நடந்துகொண்டிருக்கும் அதே சமயமே அந்தக் காற்றாடிகள் நிர்மாணிக்கப்பட ஆரம்பித்து 2019, 2020 இல் அவ்வேலைகள் நிறைவடைந்து மின்சாரத் தயாரிப்பு ஆரம்பித்தது.
அங்கே தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் 170,000 வீடுகளுக்கு எரிசக்தி கொடுக்கிறது. நோர்வேயின் மத்திய பிராந்தியத்தில் அதுவரை தட்டுப்பாடாக இருந்த மின்சக்தி அங்கே தயாரிக்கப்பட்ட மின்சாரம் மூலம் மேலதிகமாக மாறியதாக Fosen Vind குறிப்பிடுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நோர்வே அரசு கொடுத்த அனுமதி தவறானது. அந்தப் பகுதியில் வாழும் ஆறு சாமி இனக் குடும்பங்களின் துருவ மான் மேய்ப்புக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கைக் கலாச்சாரத்துக்கு இடையூறு செய்கிறது. சாமி மக்கள் அந்தப் பகுதியில் சுமார் 500 வருடங்களுக்கும் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். காற்றாடிகளின் அரவமும், மனிதர்களின் நடமாட்டமும் துருவ மான்களை அப்பகுதிக்கு வராமல் இடைஞ்சல் செய்வதாகச் சாமி மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தீர்ப்பின் பின்னர் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட காற்றாடிகளை அகற்றும்படி சாமி இனத்தவர் கோருகிறார்கள். மின்சார மையத்தை இயக்கும் நிறுவனமோ அதைத் தொடர்ந்தும் இயக்க விரும்புகிறது. அந்த நிறுவனத்தின் பகுதி உரிமையாளர் நோர்வே அரசுதான். நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தலின் பின்னர் வந்த அரசு, “பழங்குடிமக்களின் உரிமைகளைப் பேணுவதிலும், நாட்டின் எரிசக்தியைப் பசுமையான வளங்களிலிருந்து எடுப்பதாக மாற்றுவதிலும் நோர்வே உலகுக்கு உதாரண நாடாகத் திகழும்,” என்று குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்