“உக்ரேன் தன்னிஷ்டப்படி நாட்டோவில் இணைந்து கிரிமியாவைக் கைப்பற்ற முயன்றல் ரஷ்யாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே போர் மூளும்,” என்றார் புத்தின்.

உக்ரேன் சம்பந்தமாக மேற்கு நாடுகளும், ரஷ்யாவும் சமீப மாதங்களில் உரத்த குரலில் வாய்ச்சண்டையில் இறங்கியிருக்கின்றன. அப்படியான நிலைமையொன்றை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு பக்கம் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தமக்குள் பேச்சுவார்த்தை செய்கின்றன. இன்னொரு பக்கத்தில் வெவ்வேறு விதத்தில் ரஷ்யத் தலைமையை அணுகிப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. அம்முயற்சிகளில் ஒன்றாக பிரான்ஸ்  ஜனாதிபதி மக்ரோன் மொஸ்கோவில் புத்தினைச் சந்தித்து ஐந்து மணித்தியாலம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

அப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரண்டு தலைவர்களும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஒரு நிருபர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த புத்தின், “பிரான்ஸுடன் ரஷ்யா போருக்குப் போகவேண்டுமா? அதுதான் நடக்கும், உக்ரேன் நாட்டோவில் இணைந்து, தமது அரச நிலைப்பாடான ‘கிரிமியா உக்ரேனுக்குச் சொந்தமானது,’ என்ற எண்ணத்தில் அதை மீட்டெடுக்க முயன்றால்,” என்று குறிப்பிட்டார்.

2014 ம் ஆண்டு உக்ரேனில் ஏற்பட்ட அரசியல் சச்சரவுகளை அடுத்து ரஷ்யா கிரிமியாவுக்குள் நுழைந்து அதைத் தனதாக்கிக்கொண்டது. தமது கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்தி அப்பிராந்திய மக்கள் தாம் ரஷ்யாவுடன் ஒரு பகுதி என்று வாக்களித்ததாக அறிவித்தது. அதை நாட்டோ நாடுகள் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்தும் சர்ச்சை செய்வதாக ரஷ்யா குற்றஞ்சாட்டுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தான் வெவ்வேறு தீர்வுகளைப் புத்தினிடம் முன்வைத்ததாகக் குறிப்பிட்டார். “எனது முன்மொழிவுகளைக் கேட்ட புத்தின் தான் நிலைமையைச் சகஜமாக்குவதில் முழு மனதுடன் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டார். உக்ரேன் சம்பந்தப்பட்ட விடயத்தில் பங்குபற்றுகிறவர்கள் எல்லோரும் வன்முறையில் இறங்காமல் தவிர்ப்பது மக்ரோனின் ஒரு முன்மொழிவு ஆகும். அதே சமயம் உக்ரேன் அரசு கிரிமியாவின் ரஷ்ய ஆதரவுப் போராளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு ஒரு தீர்வைக் காணவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மக்ரோனின் முன்மொழிவுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான தீர்வுகளைக் காண உதவலாம். சகல பகுதியாருக்கும் தீர்வைக் காணும் வழியில் ஈடுபடும் முயற்சிகள் எல்லாவற்றையும் நாம் செய்வோம்,” என்று புத்தின் கூறினார்.

சாள்ஸ் ஜெ. போமன்