ஈபிள் கோபுர உச்சியை இடிமின்னல் தாக்கியது!

பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ‘orages’ எனப்படுகின்ற இடியுடன் கூடிய புயல் மழை ஏற்பட்டுள்ளது. மிகக் குறுகிய நேரத்துக்குள் கொட்டித் தீர்க்கும் இந்தப் புயல் மழையால் பல இடங்களில் வீதிகள் திடீரென வெள்ளத்தால் நிரம்பின.

இன்று வெள்ளி விடிகாலை நேரம் பாரிஸ் நகரில் ஏற்பட்ட புயல் மழையின் போதுஈபிள் கோபுரத்தின் உச்சிப் பகுதியைமின்னல் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

ஆண்டு தோறும் புயல் மழைக்காலங்களில் ஈபிள் கோபுரம் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகுவது வழக்கம்.உயர்ந்த இடங்களை மின்னல் தாக்குகின்ற காட்சிகளைப் படம் பிடிக்கின்ற பிரபல படப்பிடிப்புக் கலைஞர் Bertrand Kulik இன்று அதிகாலை 04.33 மணிக்கு ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியதை படமாக்கி உள்ளார்.

பிரான்ஸில் “orages” என அழைக்கப்படுகின்ற இடி மின்னலுடன் கூடிய புயல்மழை சிறிது நேர இடைவெளிக்குள் 30 முதல் 60 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியைக் கூட ஏற்படுத்துவதுண்டு. இன்று முழுநாளும் நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை அவதான நிலையம் நாட்டின் வடக்கே Nord,Pas-de-Calais, l’Aisne பிரதேசங்களில் செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விடுத்துள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *