பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே கடல் வழி வரும் அகதிகள் பற்றிய வாய்ச்சண்டை ஏற்பட்டிருக்கிறது.

அகதிகள் வழக்கமாக வரும் வழிகள் பல மூடப்பட்டிருப்பதால் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களை எப்படியாவது நிறுத்துவது என்று கங்கணம் கட்டியிருக்கிறது பிரிட்டன். அதற்கான கடுமையான முடிவுகளை எடுக்கும்படி எல்லை அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் உள்விவகார அமைச்சர் பிரீதி பட்டேல் உத்தரவு கொடுத்திருக்கிறார்.

பிரான்சின் கலே நகரிலிருந்து 2018 இல் 300 அகதிகள் மட்டுமே பிரிட்டனுக்குக் ஆங்கிலக் கால்வாய் மூலமாக வந்தார்கள். அதற்கடுத்த வருடம் அந்த எண்ணிக்கை 1892 ஆனது. 2021 இல் இதுவரை 4,100 க்கும் அதிகமானோர் அவ்வழியாக வந்திறங்கியிருக்கிறார்கள். அது உயிருக்கு மிகவும் ஆபத்தான வழியாக இருப்பினும் மனிதக் கடத்தல்காரர்களின் உதவியால் அதனூடாக முயற்சிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. கடந்த ஆண்டுகளில் பிரிட்டன் 5.5 மில்லியன் பவுண்டுகள் செலவழித்து அப்பாதையில் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறது. மட்டுமன்றி, சட்டபூர்வமாக பிரிட்டனுக்கு வராதவர்களுக்குச் சிறைவாசம் என்ற புதிய சட்டப் பிரேரணையும் ஆராய்விலிருக்கிறது.

கொரோனாக்காலத்தில் அவ்வழியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஏதோ காரணத்துக்காகப் பிரான்ஸ் அகதிகள் அங்கிருக்க விரும்பாமல் ஐக்கிய ராச்சியத்துக்குள் நுழைய முற்படுகிறார்கள். இரண்டு நாட்டு உயர்மட்டத் தலைவர்களும் சந்தித்து அப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி  மும்முரமாக விவாதித்து வருகிறார்கள்.

ஆங்கிலக் கால்வாயின் பிரென்சுப் பகுதியில் அகதிகள் தாம் அங்கிருக்கும் பொலீசாரால் பல வகைகளிலும் துன்புறுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அப்பொலீசார் நிறவாதிகள் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். அத்துடன் பிரான்சின் அகதிகள் பேணும் திணைக்களத்திடம் அகதிகளுக்கான வீட்டு வசதிகளில்லை. சமீபத்தில் அவர்களால் தமது அகதிகளுக்கு அடிப்படை வசதிகளெதுவும் செய்துகொடுக்க முடியவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

பிரிட்டனுக்கும், பிரான்சுக்குமிடையேயான கடல் எல்லையை ஒன்றிணைந்து பாதுகாப்பதற்கு பிரிட்டன் கொடுக்கும் 54 மில்லியன் பவுண்டுகளைத் தாம் கொடுக்காமல் நிறுத்துவோம் என்று பிரிட்டன் எச்சரித்திருக்கிறது. அப்படியான மிரட்டல்களைத் தாம் பொறுக்க முடியாது என்று பிரான்சின் உள்துறை அமைச்சர் கோபத்துடன் பதிலளித்திருக்கிறார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *