வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு:அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு பிரான்ஸ் நீதிமன்றம் நிராகரிப்பு

வியட்நாம் போரின் போது அமெரிக் காவுக்கு இரசாயனப் பொருள்களைவிநியோகித்த நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது.

‘அமெரிக்காவின் யுத்தகாலச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம் கிடையாது’ என்று நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

பிரான்ஸில் வசிக்கின்ற வியட்நாமியப் பத்திரிகையாளரான 79 வயது ட்ரான் தோ என்கா(Tran To Nga)என்ற பெண்ணே நீண்ட காலச் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கை பிரான்ஸின் நீதி மன்றம் ஒன்றில் தாக்கல் செய்திருந்தார்.

அழிவுகளுக்குப் பொறுப்புக் கூறல், நஷ்டஈடு வழங்குதல் ஆகியவற்றை முன்வைத்துக் கம்பனிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவற்றுக்குச் சார்பாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதுகுறித்து ட்ரான் தோ என்கா அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கிறார். தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

அன்றைய அமெரிக்காவின் சட்டங்களுக்கு அமைய அதற்குக் கட்டுப்பட்டே செயற்பட்டதாக கம்பனிகளின் சார்பில் வாதாடிய சட்டவாளர் குறிப்பிட்டிருந்தார். Bayer-Monsanto நிறுவனத்தின் சட்டவாளர், “இறைமையுள்ள ஒரு நாட்டின் போர்க் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்துத் தீர்ப்பளிப்பதற்கு பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாது”என்று வாதிட்டார்.

பாரிஸ் நகருக்கு வெளியே எவ்றி என்னும் நகரில் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில்( Le tribunal d’Évry) இந்த வழக்கு கடந்த 2014 இல் தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

அது கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. யுத்தத்தின் போது வியட்நாம் காடுகள் மீது அமெரிக்கா பெருவாரியான நச்சுக் குண்டுகளை வீசியது. அடர்ந்த காடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் மறைவிடங்களை அழிப்பதற்காகவீசப்பட்ட இரசாயனக் குண்டுகள் ஏற்படுத்திய சூழல் தாக்கம் பல தசாப்தங்கள் கடந்து இன்னமும் நீடிக்கிறது.

வியட்நாமில் இன்றைக்கும் உடல்குறை பாடுகளுடன் ஏராளமான குழந்தைகள் பிறப்பதற்கு நச்சுக்குண்டுகளின் தாக்கமே காரணம் என்று சொல்லப்படுகிறது.

1962 – 1971 காலப்பகுதியில் நிகழ்ந்த அமெரிக்காவின் அந்த இராணுவ நடவடிக்கை “ஏஜென்ட் ஒரேஞ்” (Agent Orange) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கப் படைகள் அதி உயர் நச்சுத்தன்மை கொண்ட விவசாயக் களை கொல்லி இரசாயன மருந்துகளை (ultra-toxic herbicide) செறிவு கூடிய அளவில் வீசிக் காடுகளைக் கருக்கி அழிந்தன. போராளிகளின் முன்னேற்றத்தைத் தடுக்கவும் அவர்களது உணவுமூலங்களை அழிக்கவும் பல மில்லியன் கலன்கள் இரசாயன நச்சுக் களைநாசனி வான்வழியே விசிறப்பட்டது.

வியட்நாம் யுத்தத்தில் நிகழ்ந்த போர்க் குற்றமாகவும் இயற்கை அழிப்புக் குற்றமாகவும்(“ecocide”) கருதப்படுகின்ற இரசாயனக் குண்டு வீச்சில் பாவிக்கப்பட்ட நச்சுக் களை கொல்லிகளை உற்பத்தி செய்த, விநியோகித்த முக்கிய14 கம்பனிகளுக்கு எதிராகவே பிரான்ஸில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஜேர்மன் – அமெரிக்க களை கொல்லித் தயாரிப்பு நிறுவனமாகிய Bayer-Monsanto மற்றும் அமெரிக்கப் பல் தேசியக் கம்பனியான Dow Chemical ஆகியனவும் அவற்றில் அடங்கும்.

ட்ரான் தோ என்கா தனது இருபதாவது வயதில் வியட்நாம் கம்யூனிஸ்ட் போராளியாக இருந்தவர். பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர். தற்போது பிரான்ஸில் வசிக்கும் அவர் வியட்நாம் போரினதும் அமெரிக்க நச்சுக் குண்டு வீச்சுக்களின தும் வாழும் சாட்சியாகத் தன்னை முன்னிறுத்தி நீண்டகாலமாக நீதி கோரி போராடி வருகிறார்.

தனது முதுமையில் புற்றுநோய், காசநோய் என்பவற்றால் பீடிக்கப்பட்ட நிலையில் வாழும் அவர், அமெரிக்க நச்சுக் குண்டுகளின் காரணமாகப் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்து வருகிறார். அவரது மகள் ஒருவர் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். பேரக் குழந்தைகள் பலரும் கூட நோய்களுக்குஇலக்காகி உள்ளனர்.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *