குவெய்த் பெண் “ஒழுக்கக் கேடான,” யோகா முகாமுக்குப் பெருவிரலைக் கவிழ்த்தது குவெய்த் அரசு.

குவெய்த்தின் பாலைவனப் பகுதியில் ஒரு நாள் யோகாசனப் பயிற்சி முகாம் ஆரம்பிக்க முயன்றார் இமான் அல்-ஹுசெய்னன். அது பற்றிய விபரங்களை அறிந்த குவெய்த் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாட்டின் கலாச்சார அமைச்சு மூலமாக அதைத் தடை செய்துவிட்டார்கள். அதற்கான “பிரத்தியேக அனுமதிப் பத்திரம்” எடுக்கவேண்டும் என்று இமானுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

“இது போன்ற நடவடிக்கைகள் எனக்கும் எனது சமூகத்திலிருக்கும் சகல பெண்களின் ஒழுக்கத்துக்கும் ஒவ்வாதவை. இப்படியான விடயங்கள் பழமை பேணும் எங்கள் சமூகத்தினுள் நுழையாமல் தடுக்கும் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சு எடுக்கவேண்டும்,” என்று கொதித்துப்போய் டுவீட்டியிருக்கிறார் குவெய்த்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஹம்டான் அல் – அஸ்மி.

குவெய்த் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை 2005 இல் கொடுக்கப்பட்டது. மற்றும் பல உரிமைகளுக்காக அந்த நாட்டுப் பெண்கள் போராடி வருகிறார்கள். அதே சமயம் அல் – ஆஸ்மி போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகத்தின் பழமைவாதிகளும் மாற்றங்களுக்கு ஏற்படலாகாது என்று போராடி வருகிறார்கள்.

கடந்த வருடம் குவெய்த் பாதுகாப்பு அமைச்சு நாட்டுப் பெண்களும் இராணுவத்தில் சேரலாம், போரில் ஈடுபடலாம் என்று அறிவித்தது. அச்சமயத்தில் அல் – ஆஸ்மியும் ஆதரவாளர்களும் அதை எதிர்த்தார்கள்.  அமைச்சு இராணுவத்தில் சேரும் பெண்கள் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து குறிப்பிட்ட சேவைகளில் மட்டுமே ஈடுபடலாம். பெண்கள் இராணுவத்தில் சேர்வதற்குக் குடும்பத்தின் ஆண் பாதுகாவலரின் அனுமதி தேவை என்றும் கோருகிறது.

“குவெய்த் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. யோகா பயிற்சியையும் அவர்கள் செய்ய மறுக்கப்படுகிறார்கள்,” என்று அல்ஜாசி அல்சனபி என்ற குவெய்த் எழுத்தாளர் டுவீட்டினார். சமூக வலைத்தளங்களில் குவெய்த் பெண்கள் யோகா பயிற்சி செய்வது பற்றிய வாதப் பிரதிவாகங்கள் பெருமளவில் நடந்து வருகின்றன. 

இமான் அல் – ஹுசெய்னன் தனது வக்கீல் மூலம் அல் – ஆஸ்மிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்