சுதந்திர வாகனப் பேரணிக்கு பாரிஸ் பொலீஸார் தடை!
தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் சார்பில் முன்னெடுக்கப்படுகின்ற வாகனப் பேரணிகளுக்குப் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் தடை விதித்திருக்கிறது.
பேரணிகளால் பொது ஒழுங்கு சீர்குலையக் கூடிய சாத்தியம் இருப்பதால் நாளைவெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரைசகல வாகனப் பேரணிகளும் தடைசெய்யப்படுவதாக பாரிஸ் தலைமையகம்விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறிப் பேரணிகளில் பங்குகொள்கின்ற வாகனச் சாரதிகள் நெடுஞ்சாலைகள் சட்ட விதிகளின் (highway code) L. 412-l சரத்தின் கீழ், இரண்டு ஆண்டுகள் சிறை, 4ஆயிரத்து 500 ஈரோக்கள் அபராதம், மற்றும் வாகன உரிமப் புள்ளிகளில் அரைவாசி பறிப்பு போன்ற தண்டனைகளுக்கு உட்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா ஒட்டாவாவில் தொடங்கப்பட்டவாகனப் பேணிப் போராட்டங்கள் தற்சமயம் பல நாடுகளுக்கும் பரவியுள்ளன.பிரான்ஸில் இந்த வாரம் பல இடங்களில்சிறிய அளவிலான வாகனப் பேரணிகள் நடைபெற்றிருக்கின்றன.வார இறுதியில்பாரிஸ் நகருக்கான வீதிகளைத் தடுக்கும் நோக்கில் பெரிய அளவிலான பேரணிகளை நடத்துவதற்கான அழைப்பு சமூகவலைத் தளங்களூடாக விடுக்கப்பட்டிருக்கிறது. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பொலீஸார் அதுகுறித்து விழிப்படைந்துள்ளனர்.
ஏற்கனவே பல இடங்களில் சிறு வாகனப்பேரணி முஸ்தீபுகள் தடுக்கப்பட்டுள்ளன.சாரதிகள் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதேவேளை, தொற்று நிலைவரம் தணிந்து வருவதால் தடுப்பூசிப் பாஸ் நடைமுறையை மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து நீக்குவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால்தெரிவித்திருக்கிறார். –
குமாரதாஸன். பாரிஸ்.