“நாட்டோ” 1999 இல் செர்பியாவின் மீது குண்டுகளால் தாக்கியதை செலின்ஸ்கி கண்டித்தால், ரஷ்யா உக்ரேனுக்குள் நுழைவதை நாம் கண்டிப்போம், என்கிறது செர்பியா.
உக்ரேனின் கிழக்கிலிருக்கும் டொம்பாஸ் பிராந்தியத்தில் இரண்டு குடியரசுகளை ரஷ்யா அங்கீகரித்ததை செர்பியா கண்டிக்கவேண்டும், என்று உக்ரேனியத் தூதுவர் கேட்டுக்கொண்டதற்குப் பதிலாகவே செர்பிய ஜனாதிபதி பதிலளித்திருக்கிறார்.
“எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், ஜேர்மனி ஆகிய நாடுகள் குண்டுகளால் மழை பொழிந்து அக்கிரமம் செய்ததை உக்ரேனின் ஜனாதிபதி செலின்ஸ்கி பகிரங்கமாகக் கண்டிப்பாரானால் நாம் உக்ரேனியத் தூதர் கேட்டுக்கொண்டபடி ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிப்பது பற்றி யோசிப்போம்,” என்று குறிப்பிட்டிருக்கிறார் செர்பிய ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வூசிச்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்காகக் காத்திருக்கும் செர்பியா பாரம்பரியமாக ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணும் நாடு ஆகும். கலாச்சாரத்தாலும் ரஷ்யாவுடன் தொடர்புள்ள செர்பியர்கள் ரஷ்யர்களைப் போலவே ஓர்த்தடொக்ஸ் கிறிஸ்தவர்களாகும். அரசியலில் செர்பியா ரஷ்யாவின் வழியைப் பின்பற்றுவதில்லை என்றும் தாம் இராணுவ அமைப்புகள் எதிலும் அணிசேராதவர்கள் என்றும் செர்பியப் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதானால் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளிலும் செர்பியா ஒன்றிணைய வேண்டும். அதேசமயம் பாரம்பரியமாகவே மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் போலன்றி, செர்பியா உட்பட்ட பால்கன் நாடுகளிடையே வித்தியாசங்களுண்டு. பக்கத்து நாடுகளான அல்பானியா, பொஸ்னியா, கொசோவா ஆகிய இஸ்லாமிய நாடுகள் செர்பியாவுடன் அரசியலில் மோதிக்கொண்டிருப்பவை.
உக்ரேனிய அரசு அல்பானியா, பொஸ்னியா, கொசோவா ஆகிய நாடுகளிலிருந்து சம்பளத்துக்கு வேலை செய்யும் இராணுவத்தினரை டொம்பாஸில் ரஷ்யர்களுக்கு எதிராகப் போரில் இறக்கியிருப்பதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்