ஐந்து ரஷ்ய விமானங்களைச் சுட்டு வீழ்த்தினோம் என்கிறது உக்ரேன், ரஷ்யாவோ மறுக்கிறது.

புதனன்று இரவு ரஷ்ய ஜனாதிபதி தனது இராணுவத்தை உக்ரேனுக்குள் நுழைந்து தாக்க உத்தரவு கொடுத்ததையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே முழுமையான போர் ஆரம்பித்திருக்கிறது. கிழக்கு உக்ரேனிலிருக்கும் லுகான்ஸ்க் பிராந்தியத்தில் ஐந்து ரஷ்ய விமானங்களையும், ஒரு ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரையும் தாம் சுட்டு விழுத்தியிருப்பதாக உக்ரேனிய இராணுவச் செய்திகள் வியாழனன்று காலையில் தெரிவித்தன.

உக்ரேனின் வான்வெளி வியாழன்று காலையிலிருந்து மூடப்பட்டிருக்கிறது. உக்ரேனின் விமானப் பாதுகாப்பைத் தாம் தாக்கி அழித்திருப்பதாக ரஷ்யா செய்தி வெளியிட்டிருக்கிறது. அத்துடன் தாம் உக்ரேனின் விமானத்தளங்களையும் தாக்கி அவைகளைச் செயற்பட முடியாமல் செய்திருப்பதாகவும் ரஷ்யா குறிப்பிடுகிறது.

ரஷ்யப் படைகள் தமக்கும் உக்ரேனுக்குமான எல்லை மூலமாக மட்டுமன்றி பெலாருஸ் எல்லை மூலமாகவும் நுழைந்திருக்கிறது என்று உக்ரேனியச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இம்மாத ஆரம்பத்தில் பெலாரூஸில் அந்த நாட்டு இராணுவத்துடன் சேர்ந்து இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடச் சென்றதாகக் குறிப்பிடப்பட்ட ரஷ்ய இராணுவம் அப்பயிற்சிகள் முடிந்தும் அங்கேயே கூடாரமடித்திருந்தது பற்றிய சந்தேகங்கள் ஏற்கனவே எழுப்பபட்டிருந்தன. பெலாரூஸ் – உக்ரேனிய எல்லையிலிருந்து உக்ரேனியத் தலைநகரான கியவ் அதிக தூரத்திலில்லை. தலைநகரத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிபெருக்கிகள் ஒலிப்பதாகவும், ரஷ்யக் குண்டுகள் விழுவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

அவ்விரு பாகங்களைத் தவிர ஏற்கனவே உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றியிருந்த கிரிமியா தீபகற்பம், அதையடுத்துள்ள நீர்ப்பரப்பு ஆகிய பகுதிகள் மூலமும் ரஷ்யாவின் படைகள் உக்ரேனுக்குள் நுழைந்து போரில் ஈடுபட்டு வருகின்றன. உக்ரேனின் கிழக்கில் ரஷ்யாவால் தனி நாடுகளாக அங்கீகரிக்கபட்ட லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளில் இருந்து ரஷ்ய ஆதரவுப் படைகள் உக்ரேனிய இராணுவத்தைத் தாக்கி வருகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்