சிரியாவில் படுமோசமான நிலையுள்ள முகாம்களில் பிரான்ஸ் குழந்தைகள் வாழவேண்டியிருப்பதை ஐ.நா கண்டித்திருக்கிறது.
சிரியாவில் குர்தீஷ் பிராந்தியத்தில் இருக்கும் சிறைமுகாம்களில் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கப் போரிலிறங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் தமது குடும்பத்தினருடன் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அவர்களுடைய வயதுக்கு வராத பிள்ளைகளும் தனியான சிறைமுகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவைகளில் பெரியதான அல்-ஹோல் சிறைமுகாமில் மட்டும் சுமார் 57,000 பேர் வாழ்கிறார்கள். மனிதர் வாழ்வதற்குரிய வசதிகளற்ற அம்முகாம்களில் நூற்றுக்கணக்கான பிரான்ஸ் குழந்தைகளும் வாழ்கிறார்கள். அதைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறது ஐ.நா பாலர்கள் உரிமை பேணும் குழு.
சிரியாவின் வடகிழக்கில் குர்தீஷ் அதிகாரத்தினால் நடத்தப்படும் சிறைமுகாம்களில் வாழும் 49 பிரென்ச் குழந்தைகள் பற்றி ஐ.நா- வின் பாலர்கள் உரிமை பேணும் குழு ஆராய்வு செய்திருக்கிறது.
“ அங்கே வாழும் குழந்தைகள் மனிதாபிமானமற்ற சுகாதார நிலைமைகளில் வாழ்கின்றனர், தண்ணீர், உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லாமல், மரண அபாயத்தை எதிர்கொள்கின்றனர்,” என்று கடுமையாக விமர்சித்திருக்கும் அந்த அறிக்கை 2021 ம் ஆண்டிலிருந்து இதுவரை மட்டுமே அங்கு 62 குழந்தைகள் இறந்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது.
குர்தீஷ் சிறைமுகாம்களில் வாழும் சில குழந்தைகள் அங்கேயே பிறந்தவை. மேலும் சில அவர்களுடைய பெற்றோர் காலிபாத்துக்காகப் போர் புரியச் சென்றபோது சிரியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சிலருடையே பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இறந்துவிட்டார்கள். அங்கே வாழும் குழந்தைகளின் இரத்த உறவினர்கள் ஐ.நா-வின் பாலர் உரிமை பேணும் குழுவிடம் நிலைமையைப் பரிசீலிக்கும்படி கேட்டதையடுத்தே அந்த ஆராய்வு நடந்திருக்கிறது.
அக்குழுவினர் இவ்விடயத்தில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் பிரென்ச் அரசு அச்சிறைமுகாம்களிலிருந்து 11 குழந்தைகளை பிரான்ஸுக்குக் கொண்டு வந்திருக்கிறது. மேலும் 38 பிள்ளைகள் அங்கே வாழ்கிறார்கள். அவர்களையும் பிரான்ஸுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அக்குழு பிரென்ச் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அக்குழந்தைகளை போர்முனை போன்றிருக்கும் அந்தச் சிறைமுகாமில் வாழ அனுமதிப்பதன் மூலம் பிரான்ஸ் குழந்தைகளின் பாதுகாப்புச் சட்டங்களை மீறுகிறது என்று அக்குழு குற்றஞ்சாட்டியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்