ஆப்ரமோவிச்சுக்குப் போலிப் பத்திரங்கள் கொடுத்துதவிய யூதத் தலைவர் தப்பியோடும் வழியில் கைது செய்யப்பட்டார்.
பிரிமியர் லீக் உதைபந்தாட்டக் குழுவான செல்ஸியின் உரிமையாளரான ரோமன் ஆப்ரமோவிச் மீது வீசப்பட்ட சுருக்குக்கயிறு அவருக்குப் போலிப் பத்திரங்களை ஒழுங்குசெய்த யூத மார்க்க பிரசாரகர்\தலைவரின் கழுத்தின் மீதும் விழ்ந்தது. டேவிட் லித்வக் என்ற போர்ட்டோ நகர யூதர்களின் தலைவர் ஜேர்மனி மூலமாக இஸ்ராயேலுக்குப் போகும் வழியில் போர்ட்டோ நகர விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ரஷ்ய ஜனாதிபதி புத்தினுக்கு மிக நெருங்கிய வட்டத்திலிருப்பவர் என்ற வகையில் ரோமன் ஆப்ரமோவிச்சின் சொத்துக்கள் ஐக்கிய ராச்சியத்தால் முடக்கப்பட்டன. அவர் தனது ஐரோப்பிய [போர்த்துக்கீச] குடியுரிமையைப் பெறுவதற்கான பத்திரங்களைக் கொடுத்துதவியவர் டேனியல் லித்வக் ஆகும். அப்பத்திரங்களின்படி ஆப்ரமோவிச் 15 ம் நூற்றாண்டில் மத்தியதரைக்கடலைச் சுற்றி வாழ்ந்து துரத்தப்பட்ட யூதர்களின் வழிவந்தவர் [Sephardic Jews] என்று காட்டியது.
ஆப்ரமோவிச்சுக்குக் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கடுகதி வேகத்தில் போர்த்துக்கீசக் குடியுரிமை வழங்கப்பட்டது. அவர் உட்பட மற்றும் சிலருக்கும் [மத்தியதரைக்கடலைச் சுற்றி வாழ்ந்து துரத்தப்பட்ட யூதர்களின் வழிவந்தவர்] பொய்யான பத்திரங்களைத் தயாரித்துக் கொடுத்தவர் என்ற காரணத்தால் டேனியல் லித்வக் மீது போர்த்துக்கீசப் பொலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். அப்படியான போலிப் பத்திரங்களைத் தயார்செய்யப் பல மில்லியன் எவ்ரோக்கள் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகவும் பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட அந்தப் புலம்பெயர்ந்தவர்களின் பரம்பரையினருக்கு அவர்களின் மூதாதையர் வாழ்ந்த நாடான போர்த்துக்காலின் குடியுரிமையை வழங்குவது என்ற சட்டம் 2015 இல் கொண்டுவரப்பட்டதது. அதற்கான விசாரணைகளை நடத்திப் பத்திரங்களை வழங்கும் பொறுப்பு லித்வக்கிடம் கொடுக்கப்பட்டிருந்தது. குடியுரிமையைப் போர்த்துக்காலிப் பெற்றுக்கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பிய ஒன்றியங்களின் வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தார்கள்.
2018 ஆண்டின் பின்னர் ஐக்கிய ராச்சியத்தில் விசா இல்லாமல் தங்கிவந்த ஆப்ரமோவிச்சுக்கு லித்வக்கின் போலி ஆவணங்களின் அடிப்படையில் போர்த்துக்காலில் மட்டுமன்றி இஸ்ராயேலிலும் குடியுரிமை கிடைத்தது.
சாள்ஸ் ஜெ. போமன்