மீண்டுமொரு புதிய சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தளமாகிறது கத்தார்.

ஆபிரிக்காவின் மத்தியிலிருக்கும் நாடான சாட் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தனது நீண்டகாலத் தலைவர் இத்ரிஸ் டெபி இத்னோவைப் பக்கத்து நாடான லிபியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதிகளின் (FACT) தாக்குதலால் இழந்தது. 1960 இல் பிரான்ஸிலிருந்து சுதந்திரம் பெற்ற அந்த நாட்டில் அதைத் தொடர்ந்து தொய்வில்லாமல் ஏற்பட்டுவரும் வெவ்வேறு குழுகளிடையேயான மோதல்களால் பல்லாயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இத்ரிஸ் டெபி இத்னோ கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது மகன் மஹமத் இத்ரிஸ் டெபி இத்னோ நாட்டின் தலைமையை ஏற்று 15 இராணுவத் தலைவர்களைக் கொண்ட அரசாங்கத்தை உண்டாக்கியிருக்கிறார். தனது நோக்கம் நாட்டில் ஒரு தேர்தலை நடத்திச் சகல தரப்பினரையும் ஒன்றுபடுத்தும் ஆட்சியைக் கொண்டுவருவதே என்கிறார் மஹமத் இத்ரிஸ் டெபி இத்னோ.

பெப்ரவரி 27 ம் திகதியன்று டொஹாவில் ஆரம்பிக்கப்படவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தாமதமாகியிருக்கின்றன. நாட்டில் மோதிக்கொள்ளும் குழுக்களில் 44  இன் பிரதிநிதிகள் டொஹாவுக்குப் பேச்சுவார்த்தைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தாலும் எல்லோரும் அங்கே வரவில்லை. நாட்டின் தலைவரைக் கொலைசெய்த (FACT) எனப்படும் குழு அழைக்கப்படவில்லை. அழைக்கப்பட்ட குழுக்கள் அனைத்தும் வராமலே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

பிரதமர் அல்பெர்ட் பஹிமி படாக்கெயும் ஆபிரிக்க ஒன்றிய அமைப்பின் தலைவரொருவரான மூசா பக்கி மொஹமதுவும் பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டத்தை ஆரம்பித்து வைத்துப் பேசினார்கள். மே 10 திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் தேசிய ஒன்றுமைக்கான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக முன்னர் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டது.

நாட்டின் ஆயுதப் போராட்டக் குழுக்கள், எதிர்க்கட்சிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளின் பின்னர் நடக்கவிருக்கும் தேசிய ஒற்றுமைக்கான கருத்துப் பகிர்தல்களின் பின்னர் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கவேண்டும் என்பதே மஹமத் இத்ரிஸ் டெபி இத்னோவின் குறிக்கோளாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *