போர்த்துக்கீச கத்தோலிக்க திருச்சபையினரால் சுமார் 5,000 பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டுவரை எவரின் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டதாகக் கருதப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடந்த அத்துமீறல்கள், அநியாயங்கள், பாலியல் வன்முறைகள் போன்றவைகள் பற்றிய பல நாடுகளும் விசாரணைகள் நடத்திவருகின்றன. அவ்வரிசையில் போர்த்துக்காலின் திருச்சபையினரும் ஒரு விசாரணையை நடத்தியதில் 4,815 பிள்ளைகள் 1950 ம் ஆண்டுக்குப் பின்னர் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வெளியாக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா, சிலே மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் தத்தம் நாட்டுக் கத்தோலிக்க திருச்சபைக்குள் நடந்த அட்டூளியங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பக்கத்து நாடான பிரான்ஸில் கத்தோலிக்க திருச்சபைக்குள் நடந்த பாலியல் குற்றங்களால் 200,000 க்கும் அதிகமான பிள்ளைகள் பாதிக்கப்பட்டார்கள் என்ற அறிக்கை கடந்த வருடம் வெளியானதைத் தொடர்ந்து அதுபற்றித் தமது நாட்டுக்குள்ளும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை போர்த்துக்காலில் எழுப்பப்பட்டது. 

போர்த்துக்கால் கத்தோலிக்க திருச்சபையினர் அவ்விசாரணைக்காக ஒரு நடுநிலையான குழுவைக் கடந்த ஆண்டு நியமித்தனர். அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விபரங்களின்படி பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்றும் அவர்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டோரில் 77 விகிதமானோர் கத்தோலிக்க குருமாரே என்றும் தெரியவந்திருக்கிறது.

கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்துவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மை அடையாளம் காட்டாமல் தமக்கு நடந்தவைகள் பற்றி வெளிப்படுத்தும்படி போர்த்துக்காலில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதையடுத்து தாமே முன்வந்து தமக்கு நேர்ந்தவைகளைப் பற்றிப் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். கடந்த ஒக்டோபரிலேயே பாதிக்கப்பட்ட  சுமார் 500 பேர் தம்மை அடையாளம் காட்டித் தமக்கு நடந்த அநியாயங்களை விபரமாக வெளியிட்டதாக போர்த்துக்கால் திருச்சபையின் ஆராய்வுக் குழுவினர் தெரிவித்திருந்தனர். அவர்களில் சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்களும் அடங்கியிருந்தனர். சிலர் தற்போது வெளிநாடுகளில் வாழ்பவர்களாகும்.

வரவிருக்கும் ஓகஸ்ட் மாதத்தில் பாப்பரசர் பிரான்சீல் போர்த்துக்காலுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். அத்தருணத்தில் அவர் பாதிக்கப்பட்டவர்கள் சிலரைச் சந்திக்கக்கூடும், பகிரங்க மன்னிப்பைக் கேட்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *