பாகிஸ்தானில் மேலுமொரு குரான் கொலை!

தேவநிந்தனை கடும் குற்றமாகக் கருதப்படும் பாகிஸ்தானில் மீண்டுமொருவரைக் குரானை இழிவு செய்ததாகக் கூறி அடித்துக் கொன்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட நபர் பொலீஸ் காவலில் இருந்தபோது அங்கே வந்த கும்பல் காவல் நிலையத்துக்குள் நுழைந்து அராஜகம் செய்ததுடன் வாரிஸ் என்று குறிப்பிடப்படும் அந்த நபரை வெளியே இழுத்துச் சென்று அடித்துக் கொன்றதாகப் பொலீசார் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் கிழக்கிலிருக்கும் நன்கானா நகரில் நடந்த சம்பவத்தில் வாரிஸ் என்பவர் முஸ்லீம்களின் புனித ஏடாகக் கருதப்படும் குரானில் தனது படத்தையும் தனது மனைவியின் படத்தையும், ஒரு கத்தியின் படத்தையும் ஒட்டியிருந்ததாகவும் பின்னர் அதை வீசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். அதனால் பொலீசார் அவரைக் கைதுசெய்து காவலில் அடைத்தார்கள். 2019 லும் வாரிஸ் தேவ நிந்தனைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு 2022 வரை பொலீஸ் காவலில் இருந்ததாகக் குறிப்பிட்ட பொலீஸ் நிலைய அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.

காவல் நிலையத்தில் அதிக பாதுகாப்பு இல்லாத சமயத்தில்  நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே நுழைந்து வாரிஸை வெளியே இழுத்துச் சென்றதாகவும், நிலைமையை அறிந்து மேலும் அதிக பொலீசார் அங்கே வரமுதல் வாரிஸ் அடித்துக் கொல்லப்பட்டுவிட்டதாகவும் பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சமூகவலைத்தளங்களை மட்டுமன்றி சமூகத்தில் விக்கிபீடியாவையும் தேவ நிந்தனையான விடயங்கள் இருப்பதாகக் கூறித் தடைசெய்திருக்கும் நாடு பாகிஸ்தான் ஆகும். அப்படியான சட்டங்களை மாற்றும்படி அரசுக்கு வெளிநாடுகளிலிருந்தும், மனித உரிமை அமைப்புக்களிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பாகிஸ்தானில் அப்படியான நடவடிக்கையை எடுக்க எந்த அரசும் துணியவில்லை. பிரதமர் நவாப் ஷெரிப் நடந்த சம்பவத்தைக் கண்டித்ததுடன் சரியான சமயத்தில் நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரிகளையும் பதவியிலிருந்து நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *