மொசாம்பிக்கின் பால்மா நகரிலிருந்து சுமார் பாதிப்பேர் நாட்டின் வேறிடங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்கள்.

மார்ச் மாதக் கடைசியில் மொசாம்பிக்கின் முக்கிய துறைமுக நகரான பால்மாவின் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலின் விளைவாக நகரிலிருந்து சுமார் 30,000 பேர் வெளியேறிவிட்டதாக ஐ.நா தெரிவிக்கிறது. அத்தாக்குதலை எதிர்நோக்க முடியாமல் நகரத்தைக் கைவிட்டுவிட்டுப் போன நாட்டின் இராணுவத்தினர் மீண்டும் அதன் கட்டுப்பாட்டை ஏற்றுவிட்டதாகச் சொன்னாலும் கூட அங்கே அடிக்கடி சிறு சிறு தாக்குதல்கள் நடந்துகொண்டேயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

https://vetrinadai.com/news/alshabab-palma/

துறைமுகம் மட்டுமன்றி எண்ணெய்க் கிணறுகளில் வெளிநாட்டு முதலீடுகள் அந்த நகரில் செய்யப்பட்டிருந்ததால் அது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகராக இருந்தது. இராணுவத்தினர் கைவிட்டுவிட்டுப் போன பின்னர் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பைக் கொடுத்துவந்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தனியார் இராணுவம் ஓரிரு நாட்கள் அங்கே தாக்குப்பிடித்து நின்றது. ஆனாலும், நகரை முற்றுக்கையிட்டு வழிகளைத் தீவிரவாதிகள் மூடிவிட்டதால் வெளியிலிருந்து ஆயுதங்களோ, உதவிகளோ பெறமுடியாத அந்தத் தனியார் நிறுவனமும் அங்கிருந்து விலகியது.

சில நூறு பேராவது பால்மா நகரில் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவருகிற்து. முழுமையான விபரங்கள் எவரிடமும் இல்லை. தாக்கி நகரைக் கைப்பற்றிய அல் ஷபாப் தீவிரவாதிகளில் ஒரு பகுதியினர் அங்குள்ள மக்களுடனே கலந்துவிட்டதாக ஊகிக்கப்படுகிறது. இராணுவம் பொறுப்பிலிருப்பினும் ஊடுருவியிருக்கும் அல் ஷபாப் தீவிரவாதிகளுக்குப் பயந்து மக்கள் அவர்களைக் காட்டிக்கொடுப்பதில்லை.

மொசாம்பிக் சுதந்திரமடைய முன்பு அதைத் தமது ஆட்சிக்குள் வைத்திருந்த போர்த்துகல் பால்மா தாக்குதலையடுத்து தனது 60 இராணுவ வீரர்களை அனுப்பியிருந்தது. அவர்கள் மொசாம்பிக் இராணுவத்தினருக்குத் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை அளிப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டது. மே 10 திகதி திங்களன்று மேலும் 80 போர்த்துக்கீச இராணுவத்தினரை மொசாம்பிக்குக்கு அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவர்கள் மொசாம்பிக் இராணுவத்தினரைப் பயிற்றுவிப்பதுடன் அவர்களுக்கு தீவிரவாதிகளை உளவு பார்ப்பது, அவர்களுடைய தொலைத்தொடர்புகளைக் கண்காணிப்பது போன்றவைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவுவார்கள்.      சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *