இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் அகதிகள் வெள்ளம்.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேன் நாட்டு மக்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் ஏற்கனவே உக்ரேனுக்கு வெளியே அகதிகளாகப் புகலிடம் தேடியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னர் இதுபோன்ற ஒரு அகதிகள் வெள்ளத்தை ஐரோப்பா இதுவரை சந்தித்ததில்லை என்று ஐ.நா-வின் அகதிகள் அமைப்பு தெரிவிக்கிறது.
தமது நாட்டின் எல்லையிலிருக்கும் போலந்து, ருமேனியா, மோல்டோவா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகிய நாடுகளின் 31 எல்லைகளின் ஊடாக அவர்கள் வெளியேறி வருகிறார்கள். போலந்து, ருமேனியா ஆகிய நாடுகளிலேயே பெரும்பாலான அகதிகள் முதல் கட்டமாகத் தங்கியிருக்கிறார்கள். ஆனால், அதையடுத்து அவர்கள் வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் புகலிடம் தேடிக்கொண்டிருப்பதால் பொதுவாகவே அகதிகள் பலரும் ஈர்க்கப்படும் நாடுகளான ஜேர்மனி, ஐக்கிய ராச்சியம், சுவீடன், டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் தினசரி அகதிகளாகி வருகிறார்கள்.
இதற்கு முன்னர் சிரியாப் போர் ஆரம்பித்ததையடுத்து அங்கிருந்து சுமார் 3 மில்லியன் பேர் பக்கத்து நாடுகளுக்கும், ஐரோப்பாவுக்கும் அகதிகளாக வந்திருக்கிறார்கள். ஆனால், அந்த மூன்று மில்லியன் என்ற தொகை மெதுவாகவே அதிகரித்தது. உக்ரேன் போர் ஆரம்பித்து மூன்றே வாரங்களில் அங்கிருந்து 3 மில்லியன் பேர் வெளியேறியிருக்கிறார்கள்.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை 2013 – 2021 வரை மொத்தமாக 6 மில்லியன் பேர் அகதிகளாகக் கோரியிருக்கிறார்கள். அவர்களில் 2.5 மில்லியன் பேர் 2015, 2016 ம் ஆண்டுகளில் அகதிகளாக வந்தவர்களாகும்.
2015 இல் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து பெருந்தொகை அகதிகள் ஐரோப்பாவுக்கு வந்தபோது ஹங்கேரிய ஜனாதிபதி அதை, “ஒரு முஸ்லீம்களின் படையெடுப்பு,” என்று குறிப்பிட்டுத் தனது நாட்டு எல்லைகளில் இராணுவத்தை நிறுத்தி அவர்களை உள்ளே விடாமல் தடைசெய்தார். ஸ்லோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகளும் அவர்களை அகதிகளாகத் தமது நாடுகளுக்குள் ஏற்க மறுத்திருந்தன. அதே நாடுகள் உக்ரேன் அகதிகளை உற்சாகத்துடன் வரவேற்றிருக்கின்றன. ஆனால், உக்ரேன் அகதிகளை அவர்கள் தமது நாடுகளில் நிரந்தரமாக அகதிகளாக அனுமதிப்பார்களா என்பது பற்றி இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்