கத்தாருடன் நீண்டகால எரிசக்தி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது ஜேர்மனி.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்துத் தனது நெருங்கிய வர்த்தக நட்பு நாடாக இருந்த ரஷ்யாவிடமிருந்து விலகிக்கொள்ளும் ஜேர்மனிய அரசின் குறிக்கோள்களில் ஒன்று தனது எரிசக்திக்காக ரஷ்யாவிடம் சார்ந்திராமலிருப்பதாகும். அந்தக் குறியை நோக்கிய முக்கிய நகர்வாக கத்தாரிடம் எரிவாயுக் கொள்வனவைச் செய்துகொள்ளும் நோக்குடன் பொருளாதார அமைச்சர் ரொபெர்ட் ஹாபாக் தனது நாட்டின் வர்த்தக முக்கியஸ்தர்களைக் கொண்ட குழுவொன்றுடன் கத்தாருக்கு விஜயம் செய்திருந்தார்.

கத்தாரின் அரசர் தமீம் பின் ஹமாத் அல் தானி, எரிசக்தி அமைச்சர் ஷாத் ஷெரீடா அல் காபி ஆகியோரைச் சந்தித்து ஜேர்மனியின் அமைச்சருடன் சென்ற குழுவினர் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஞாயிறன்று இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலத் திரவ எரிவாயு கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக ஜேர்மனியிலிருந்து செய்திகள் வெளியாகின. 

“அடுத்த குளிர்காலம் வரமுதல் நாம் எங்களுக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளாவிடின் எங்கள் நாட்டு மக்களின் வீடுகளை வெம்மையாக வைத்திருக்கவோ, தொழிற்சாலைகளுக்கான எரிசக்தியைக் கொடுக்கவோ முடியாது,” என்று அமைச்சர் ரொபெர்ட் ஹாபக் பேட்டியொன்றில் தெரிவித்தார். ஜேர்மனியை அடுத்து அவர் எமிரேட்ஸுக்கும் விஜயம் செய்கிறார்.

ஜேர்மனியைப் பொறுத்தவரை நாட்டின் எரிசக்தித் தேவையை சூழலுக்குப் பாதகம் செய்யாத எரிபொருட்களால்ப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற குறிக்கோளும் முக்கியமானதாகும். அக்காரணத்துக்காகத் தனது நாட்டின் அணுமின்சார நிலையங்களையும் விரைவில் முழுசாக மூடப்போகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *