அருங்கோடையில் மழை.. குளிர்.. ஆங்காங்கே காட்டுத் தீ அனர்த்தம் புரியாத புதிராக மாறும் வானிலை!

ஐரோப்பா எங்கும் இம்முறை கோடை விடுமுறையின் முதல் மாதமாகிய ஜூலை கடும் மழை வெள்ளப் பெருக்குகளுடன் முடிந்திருக்கிறது. ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்துபோன்ற நாடுகள் வழமைக்கு மாறானபுயல் மழை வெள்ளம், இடி, மின்னலைச்சந்திக்க நேர்ந்துள்ளது.

பிரான்ஸில் கண்ணைப் பறிக்கும் கோடை வெயிலை இன்னும் கூடக் காணமுடியவில்லை. விடுமுறையில் கறுப்புக் கண்ணாடி அணிந்து வெயிலை ரசிக்கப் புறப்பட்ட பலர் குடையோடு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆடைக்குறைப்புடன் சூரியக் குளியல் செய்கின்ற எவரையும் பூங்காக்களில் காணமுடியவில்லை.

கொரோனா கட்டுப்பாடுகளை விட்டு விடுதலையாகி – அவசரமாக ஊசி ஏற்றிக் கொண்டு – புறப்பட்ட பயணங்களை மழையும் மப்பும் குழப்பியடித்து விட்டதால் பலரும் விரக்தியில் இருக்கிறார்கள் விட்டு விட்டுப் பெய்த மழை, லேசான குளிர் என ஜூலை மாதம் கடந்துபோய்விட்டது.ஒகஸ்ட் மாதத்தின் முதல் இரு வாரகங்களும் கூட குளிர்மையாகவே இருக்கும் என்று பிரான்ஸின் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

ஒரே நாட்டுக்குள் பல வித காலநிலைநிகழ்வுகளும் குறுகிய காலப்பகுதிக்குள்சட்டென்று மாறுகின்ற வானிலையும் எதிர்வு கூறல்களை சவாலுக்கு உள்ளாக்குகின்றன. ஜேர்மனியின் வெள்ள அனர்த்தம் முன்கூட்டியே சரியான முறையில் எச்சரிக்கப்படவில்லை என்று சர்ச்சைகள்வேறு எழுந்துள்ளன.அங்கு மழை அரசியலில் ‘புயலைக்’ கிளப்பி உள்ளது.

பல பகுதிகளிலும் குளிர்மையான காலநிலை காணப்படும் அதேசமயத்தில் ஏராளமான இடங்களில் நெருப்புகளும் மூண்டுள்ளன. இடிமின்னல் மழைக்குப்பின் எழுகின்ற கடும் வெப்பம் காடுகளில் தீயை மூட்டுகின்றது.பிரான்ஸின் தெற்கே ஸ்பெயின் எல்லையோரமாக மலைக்காடுகளில் தீ மூண்டெரிகின்றது. இத்தாலியின் சிசிலித் (Sicily) தீவில்காட்டுத் தீ காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

துருக்கியில் மத்தியதரை உல்லாச மையங்கள் அமைந்திருக்கின்ற பகுதிகளில்பரவிய காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் இணைந்த கூட்டுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அங்கு விடுமுறை கழிக்க வந்த உல்லாசப் பயணிகள் கரையோர நகரங்களில் இருந்து கடல் வழியே மீட்கப்பட்டுவருகின்றனர்.

துருக்கியில் மத்தியதரை உல்லாச மையங்கள் அமைந்திருக்கின்ற பகுதிகளில்பரவிய காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் இணைந்த கூட்டுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அங்கு விடுமுறை கழிக்க வந்த உல்லாசப் பயணிகள் கரையோர நகரங்களில் இருந்து கடல் வழியே மீட்கப்பட்டுவருகின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *