பெற்றோல் வினியோக நிலையங்களுக்கு சிறீலங்காவில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
சுதந்திரமடைந்த பின் முதல் தடவையாக மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் சிறீலங்கா அரசு அதனால் ஏற்பட்டிருக்கும் மக்களின் கோபத்தைச் சமாளிக்க வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் எரிபொருட்கள் தட்டுப்பாட்டால் அவைகளை விற்கும் நிலையங்களில் எழுந்துவரும் மக்கள் போராட்டங்களைச் சமாளிக்க இராணுவத்தைப் பாதுகாப்புக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கிறது.
நாட்டின் பெரும்பாலான பிராந்தியங்களுக்கு எரிபொருட்களை விநியோகம் செய்யும் சிலோன் பெற்றோலியம் கோர்ப்பரேஷன் மையங்களுக்கெல்லாம் இராணுவப் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
தமக்குத் தேவையான மண்ணெண்ணெய் கிடைக்காததால் திங்களன்று கொழும்பின் பிரதான வீதியொன்றை மக்கள் கூட்டம் மறித்துப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. கைகளில் எரிவாயுக் கொள்கலங்களுடன் அதை வாங்கக் கூடி நின்ற பெண்கள், அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததைச் சமூகவலைத்தளங்களில் பலர் வெளியிட்டிருக்கிறார்கள்.
இரவிரவாக எரிபொருள் வாங்க வினியோக நிலையங்களில் காத்து நிற்கும் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். அக்கும்பலில் காத்து நின்ற மூன்று வயதானவர்கள் மயங்கி விழுந்து இறந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்டிருப்பதாக நாட்டின் ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சே கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்