சுமார் நான்கு லட்சம் பேரை உக்ரேனிலிருந்து ரஷ்யாவின் வெவ்வேறு நகரங்களுக்கு கட்டாயமாகக் கொண்டு சென்றிருக்கிறது ரஷ்யா.
போர் ஆரம்பித்த ஒரு மாதத்தில் ரஷ்யா கட்டாயப்படுத்தி லட்சக்கணக்கான உக்ரேனியக் குடிமக்களைத் தனது நாட்டின் வெவ்வேறு நகரங்களுக்குக் கொண்டு சென்றிருப்பதாக வெவ்வேறு ஊடகங்களின் செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர்களின் எண்ணிக்கை சுமார் 400,000 க்குக் குறையாது என்று உக்ரேனிய மனித உரிமை அமைப்பொன்றின் காரியதரிசி லுட்மில்லா டெனிசோவா குற்றஞ்சாட்டுகிறார். அவர்களில் 80,000 பேர் குழந்தைகள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
ரஷ்யப் படைகள் கடந்த இரண்டு வாரங்களாகச் சுற்றிவளைத்துத் தாக்கிவரும் மரியப்பூல் நகரிலிருந்து தகன்ரோக் [Taganrog] என்ற ரஷ்ய நகருக்கு அந்த நகரின் உக்ரேனியக் குடிமக்களைக் கட்டாயமாகக் கொண்டு சென்றதாக டெனிசோவா குறிப்பிடுகிறார். உக்ரேனின் வெவ்வேறு நகரங்களைத் தாக்கும்போது அந்த நகர மக்களை வெளியேறப் பாதுகாப்பான வழிகள் மூலம் அனுமதித்த ரஷ்யர்கள் மரியப்பூல் நகரத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளைத் திறக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தகன்ரோக் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களின் உக்ரேனியப் பத்திரங்கள், அடையாள அட்டைகள் ஆகியவையும், அவர்களுடைய சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதையடுத்து அவர்கள் ரஷ்யாவின் சனத்தொகை குறைந்த நகரங்களுக்குச் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அந்த நகரில் அவர்கள் கட்டாயமாக இரண்டு வருடங்கள் வேலை செய்யவேண்டுமென்று காட்டும் பத்திரங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் டெனிசோவா குறிப்பிடுகிறார்.
உக்ரேனின் வெளிவிவகார அமைச்சரின் காரியதரிசி ஒலெக் நிகலென்கோவும் மரியப்பூல் நகரிலிருந்து பிள்ளைகள் கட்டாயமாகக் கடத்தி ரஷ்யாவுக்குள் கொண்டு செல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு அது சர்வதேச குடிமக்கள் சட்டத்துக்கு எதிரானது என்று சுட்டிக் காட்டியிருந்தார்.
சமீப வாரங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் தமது நாட்டுக்குள் அடைக்கலம் தேடி வந்திருப்பதாக ரஷ்யாவின் ஊடகங்கள் எழுதிவருகின்றன. சர்வதேச ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களுக் குற்றஞ்சாட்டிவரும் நாடு கடத்தல்களும், கட்டாயப் புலம்பெயர்வுகளும் நிஜமானவையா என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்