பாராளுமன்றக் கூட்டச் சமயத்தில் கைப்பேசியில் ஆபாசப் படங்கள் பார்த்த ஆளும் கட்சி உறுப்பினர் பதவி விலகினார்.
பிரிட்டனின் ஆளும் கட்சியான பழமைபேணும் கட்சியின் உறுப்பினரான நீல் பரிஷ் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் சமயத்தில் தனது கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பக்கத்திலிருந்த பெண் உறுப்பினர் கவனித்தார். நீல் பரிஷ் வேண்டுமென்றே அப்பெண் உறுப்பினர் பார்க்கக்கூடியதாக அதைச் செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்விடயம் பகிரங்கமாகியது அவரது கட்சிச் சகாக்கள் பலரும் அவரைப் பதவி விலகும்படி நிர்ப்பந்தம் செய்தனர்.
ஏற்கனவே கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறிய பிரதமரும் அவரது சகாக்களும் பொலீஸ் விசாரணைக்கு உள்ளாகியிருப்பதால் கட்சியின் நடத்தை மீது மக்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள். மே ஐந்தாம் திகதி தேர்தல்கள் நடக்கவிருக்கும் சமயத்தில் நீல் பரிஷின் நடத்தை கட்சிக்கு மேலும் இழுக்கை ஏற்படுத்தும் என்று அவர்கள் பயப்பிடுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் பெண்களை அவமானம் செய்தல், தாழ்த்தி நடத்துதல், பாலியல் சேட்டைகள் செய்தல் போன்றவற்றில் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாகச் சமீப காலத்தில் பல குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பெண் ஊழியர்களும், உறுப்பினர்களும் அப்படியான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும்போது பிரதமரும், கட்சித் தலைவர்களும் அவற்றை உதாசீனப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டு வந்தது.
2010 முதல் பாராளுமன்ற உறுப்பினராகியிருக்கும் நீல் பரிஷ் தான் ஆபாசப் படங்களைப் பார்க்க உத்தேசிக்கவில்லை என்று தவறுதலாக அந்தத் தளத்துக்குப் போனதாகவும் கூறித் தப்பிக்கப் பார்த்தார். ஆரம்பத்தில் மறுத்தும், பின்னர் தனது தவறை ஏற்றுக்கொண்டு ஆனால், ராஜினாமா செய்ய மறுத்தும் வந்த அவர் சனியன்று பாராளுமன்ற வட்டாரத்தில் ஏற்படுத்தப்பட்ட பெரும் அழுத்தத்தைத் தவிர்க்க முடியாமல் பதவி விலகினார்.
சாள்ஸ் ஜெ. போமன்