கிரிஸ்டியான்போர்க் அரண்மனையில் இந்தியப் பிரதமருக்கு நோர்டிக் நாட்டுத் தலைவர்கள் சிகப்புக் கம்பள வரவேற்பு.

ஜெர்மனியில் பிரதமர் ஒலொவ் ஷ்ஷோல்ஸைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன் கிழமையன்று நோர்டிக் நாடுகளின் தலைவர்களை கொப்பன்ஹேகனில் சந்திக்கவிருக்கிறார். 2018 ம் ஆண்டிலேயே இதேபோன்ற சந்திப்பொன்று இரு சாராருக்கும் இடையே நடந்திருக்கிறது.

தொடர்ந்தும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரை “போர்” என்று உத்தியோகபூர்வமாகக் குறிப்பிட்டுக் கண்டிக்காமலிருக்கும் நாடு இந்தியா. தனது, “அணிசேராக் கோட்பாட்டைச்” சுட்டிக்காட்டி ரஷ்யாவும் உக்ரேனும் தமக்கிடையேயான முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று  இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதேசமயம், அமெரிக்காவுடனும், ஐரோப்பாவுடனும் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகிறது.

ஐரோப்பிய நோக்கில், நடந்துவரும் இந்தியப் பிரதமரின் சுற்றுப்பயணத்தை ரஷ்யாவை ஒதுக்கிவைக்க இந்தியாவை வளைக்கும் நோக்காகக் கருதப்படுகிறது. அத்துடன் சூழலையும், இயற்கையையும் பாதிக்காத சக்திகளைப் பயன்படுத்தித் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்துப் பெருமளவில் பாவிப்பதும் இரண்டு சாராருக்குமிடையே மேலுமொரு முக்கிய பேசுபொருளாக விளங்கும்.

இந்தியா 1994 ம் ஆண்டிலிருந்தே ஐ.நா-வின் பாதுகாப்புச் சபை நிரந்தர உறுப்பினராகும் எண்ணத்தில் கொதித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான ஆதரவை நோர்டிக் நாடுகளிடம் பெறுவதற்காக நடக்கவிருக்கும் மாநாட்டை இந்தியா பாவிக்கும் என்று கணிக்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அவ்வெண்ணத்தை ஆதரிப்பதில் நோர்டிக் நாடுகளுக்கு ஆர்வம் இருப்பினும் ஆளும் பா.ஜ.கட்சியின் இந்தித்துவா கோட்பாட்டையும் அதன் விளைவால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சிறுபான்மையினரை நசுக்கும் நிலைப்பாட்டையும் அவை வெறுப்புடன் கவனித்து வருகின்றன.

எனவே, மாநாட்டுக்கு முன்னரும், பின்னரும் மோடிக்கும் நோர்டிக் நாட்டுத் தலைவர்களுக்கும் தனித்தனியே நடக்கவிருக்கும் சந்திப்புக்களில் இந்தியாவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என்று சுவீடன், பின்லாந்து நாட்டு அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *