1986 உலகக்கோப்பை வெற்றியின்போது மரடோனா அணிந்திருந்த சட்டையின் விலை 7 மில்லியன் பவுண்டுகள்.
ஆர்ஜென்ரீனாவின் உதைபந்தாட்ட வீரர் மரடோனா இறந்த பின்னரும் சரித்திரம் படைத்திருக்கிறார் தான் அணிந்திருந்த சட்டையொன்றின் மூலமாக. நூற்றாண்டின் சம்பவம் என்று வர்ணிக்கப்படும் 1986 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் இங்கிலாந்து அணியின் வலைக்குள் பந்தைப் போட்டபோது அணிந்திருந்த சட்டை 7,142, 500 பவுண்டுகளுக்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது.
விளையாட்டுச் சம்பந்தப்பட்ட பொருளொன்று இதுவரை இத்தனை அதிக விலைக்கு உலகில் விற்கப்பட்டதில்லை என்ற சாதனையைப் படைத்திருக்கிறது அந்தச் சட்டை. குறிப்பிட்ட மோதலின்போது மரடோனா இரண்டு தடவைகள் எதிரணியின் வலைக்குள் பந்துகளைப் போட்ட விதங்கள் இன்றுவரை பெரும்பாலானவர்களைக் கவர்ந்து வருகின்றன.
அந்த மோதலின்போது இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஸ்டீவ் கொட்ஜ் அந்த மோதல் முடிந்தபோது மரடோனாவுடன் தனது சட்டையை மாற்றிக்கொண்டார். அவரிடமே அந்தச் சட்டை இதுவரை இருந்தது.
அந்த மோதலின்போது மரடோனா ஒரு தடவை பந்தை வலைக்குள் போட்டபோது அவரது கை அப்பந்தைத் தள்ளியது என்று படங்களில் காண முடிந்தது. ஆனால், அச்சந்தர்ப்பத்தில் தற்போதைய தொழில்நுட்பங்கள் இல்லாததால் சந்தேகத்துக்குரிய கோல்கள் ஆராயப்படுவதில்லை. எனவே அந்தச் சட்டை போட்டபடி மரடோனா பந்தை வலைக்குள் போட்டபோது அவரது கைகள், “கடவுளின் கைகளாகின” என்று குறிப்பிடப்படுவதுண்டு.
சாள்ஸ் ஜெ. போமன்