முடிசரிந்த மண்ணே
பாடல் வரிகள் : ஈழத்துப்பித்தன் (இணுவையூர் மயூரன்)
இசை: இணுவையூர் உமா சதீஸ்
பாடியவர்: ஹரினி
வெளியீடு : 18.05.2018
பல்லவி
கொத்துக் கொத்தாய் எங்கள் இனம்
குருதியிலே மிதந்திருக்க
செத்துச் செத்து நாம் துடித்தோம்
தினமும் இங்கே
முத்து முத்தாய் கண்ணீர் சிந்தி
மனம் கனத்தோம்
முள்ளிவாய்க்கால் சேதி கேட்டு
முகம் கறுத்தோம்
சரணம். 1
முள்ளிவாய்க்கால் பேரைச் சொல்ல மனம் கனக்கும்
எம் முடி சரிந்த மண்ணைகாண மனம் வெடிக்கும்
கள்ளிப் பற்றை காடுகளும் கதை சொரியும் அந்த
பட்டிச் செடி பூச்சொரிந்து பா வடிக்கும்
வட்டு வாய்க்கால் பாலம் காண மனம் உறையும்
அந்த வாவி நீரும் சாட்சி சொல்லி தினம் சிவக்கும்
சரணம் 2
தகதகிட….
காலங்களாய் சுமந்த கனவுகள் தொலைத்தோம்
நாளை விடியல் என்ற நம்பிக்கை தொலைத்தோம்
ஆழி கரையினில் அனைத்தும் கரைத்தோம்
ஈழ நினைவை மட்டும் நெஞ்சில் சுமந்தோம்
பார மனதுடனே பயணம் தொடர்ந்தோம்
உயிரினைச் சுமக்க உணர்வினைத் மறைத்தோம்
(பல்லவி….)
சரணம் 3
மாத்தளனில் புதைந்த மக்கள் நினைவு கொல்லும்.
மறுபடியும் வந்து வந்து மனத்திரையில் மெல்லும்
ஆயிரம் கதை புதைந்து அகழிகளுள் கிடக்குதங்கே
ஆற்றுவார் இன்றி அரற்றுகின்றோம் தினமும் இங்கே
வேதனைகள் தீரும் நாளும் வந்து விடாதோ
விடிவொன்று எம் குடிக்கு வந்துவிடாதோ…
(பல்லவி…)
பாடல் வரிகள் : ஈழத்துப்பித்தன் (இணுவையூர் மயூரன்)
இசை: இணுவையூர் உமா சதீஸ்
பாடியவர்: ஹரினி
வெளியீடு : 18.05.2018