தன்னேரிலாத தமிழ்…!
உலகில் சிறந்த உயர் தனிச் செம்மொழி!
உயிர்க்குலம் மொழிந்த உலகின் முதன்மொழி
பலப்பல கலைகள் வளர்த்த வளர்மொழி
பாரோர் போற்றும் பைந்தமிழ் எம்மொழி
வள்ளுவர் ஈந்த வாய்மைக் குறள்மொழி
வண்டமிழ் இலக்கணம் காப்பியன் செய்மொழி தெள்ளிய பக்தித் திருவா
சகமொழி
தேன்னிகர் தேவா ரப்பண்
இசைமொழி
திருவோங்(கு) இளங்கோ சிலம்புச் செம்மொழி
திருத்த கன்செய் சிந்தா மணிமொழி
திருமூ லன்செய் திருமந் திரமொழி
திருவருட் பாவாய் திருநிறைப் புகழ்மொழி
பட்டினத் தார்க்குத் தத்துவத் தாய்மொழி
பட்டுக் கோட்டையின் சாட்டைப் பாமொழி
பாரதி பாடிட புதுமைக் கவிமொழி
பாரதி தாசனின் புரட்சிப் புயல்மொழி
கண்ணுதற் கடவுளும் கழகம் புகுந்திடக்
காரண மானது கன்னித் தமிழ்மொழி
கம்பன் காவியக் கன்னல் சுவைமொழி
கண்ண தாசனின் காதல் தேன்மொழி
எத்தகு இன்னலும் ஏற்றுச் செரித்திடும்
இத்தரை மீதினில் நின்று நிலைத்திடும்
சொத்தாய்ச் சுடராய்ச் சுடரொளி வீசிடும்
முத்தாய் மணியாய் நாளும் ஒளிர்ந்திடும்
அயலரும் மயங்கிட இயலிசை நாடகம்
அயர்வினைப் போக்கிட அழகாய் ஈந்திடும்
உயர்வினை மட்டுமே உலகிற் குரைத்திடும்
உயர்மொழி தமிழுக் (கு) ஈடெம் மொழியோ….
எழுதுவது: புலவர் ச.ந.இளங்குமரன்
நாகலாபுரம்,
தேனி மவடடம்.