இஸ்ராயேலுடன் எந்தத் தொடர்புகளையும் வைத்துக்கொள்வது சட்டத்துக்கு எதிரானது என்றது ஈராக்.
இஸ்ராயேலுடனான தொடர்புகள் சட்டத்துக்குப் புறம்பானவை என்கிறது வியாழனன்று ஈராக்கியப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சட்டமொன்று. 329 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 275 பேரின் ஆதரவைப் பெற்றது அந்தச் சட்டம்.
இஸ்ராயேலுடன் தொடர்பு கொள்வது அல்லது அந்த நாட்டுடன் உறவுகளை நெருக்கிக்கொள்ள எந்தவிதமான முயற்சிகளிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். அதற்கான தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடுகிறது அந்தச் சட்டம். 1948 ம் ஆண்டு ஈராக் நிறுவப்பட்ட காலம் முதல் இதுவரை அது இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் நடந்த ஈராக் தேர்தலில் ஷீயா மார்க்க அரசியல் தலைவரான முக்தடா அல் சாதிர் கட்சி பெருமளவு ஆதரவைப் பெற்றது. ஈரான் ஆதரவுடன் செயற்படும் அவர்கள் ஈரானின் பரம விரோதியான இஸ்ராயேலுடன் ஈராக்கும் நட்பாக மாறுவதைத் தடுக்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இதை அமெரிக்கா, இஸ்ராயேல் ஆகிய நாடுகள் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்