தனது சேகரிப்புகளிலிருக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யத் துடிக்கிறது உக்ரேன்.
உலகமெங்கும் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மோசமாகி வருகிறது. அதனால், வறிய நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் தனது கைவசமிருக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்ய வழியின்றித் தவிக்கிறது உக்ரேன். உக்ரேனின் முக்கிய கருங்கடல் துறைமுகங்களைச் சுற்றிவளைத்திருக்கிறது ரஷ்யா.
உக்ரேனுக்கு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இராணுவம் நுழைந்த சந்தர்ப்பத்தில் மாதாமாதம் சுமார் 6 மில்லியன் தானியவகைகளையும், சோளத்தையும் ஏற்றுமதி செய்து வந்தது உக்ரேன். மார்ச் மாதத்தில் அவர்களால் சுமார் 300,000 தொன் தானியங்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிந்தது. அதற்கடுத்த மாதத்தில் அது 1.1 மில்லியன் தொன்னாக அதிகரித்தது. தற்போது அவர்களின் கைவசம் ஏற்றுமதிக்காகச் சுமார் 20 மில்லியன் தொன் தானியவகைகள் தேங்கியிருக்கிறது. அது, கோடை மாதங்களில் நடக்கவிருக்கும் அறுவடையின்போது மேலும் 40 மில்லியன் தொன்னால் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
உக்ரேனுடைய கருங்கடல் துறைமுகங்கள் ஊடாகத் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் ரயில் மூலம் அதைச் செய்ய உக்ரேன் முயற்சிக்கிறது. ஆனால், பக்கத்து நாடுகளுக்கு ஊடாக அதைச் செய்வது இலகுவான விடயமல்ல. உக்ரேன் ரயில் பாதைகள் சோவியத் யூனியனில் அது பாகமாக இருந்தபோது உண்டாக்கப்பட்டவை. அதன் அகல அளவும் பக்கத்து நாட்டு ரயில்பாதைகளின் அளவும் வெவ்வேறானது என்பதால் அதை எல்லைகளில் கொண்டுவந்து மீண்டும் இன்னொரு நாட்டின் ரயில் பெட்டிகளில் ஏற்றவேண்டும். பக்கத்து நாட்டு ரயில் பாதைகளில் கொண்டுசெல்ல வசதி கிடைக்கவேண்டும். அத்துடன் உக்ரேனில் தேவையான அளவு சரக்கு ரயில் பெட்டிகளும் இல்லை.
பாரவண்டிகளில் கொண்டுசெல்வதிலும் பிரச்சினைகள் பலவற்றை உக்ரேன் எதிர்கொள்கிறது. தேவையான பாரவண்டிகளோ, எரிபொருளோ உக்ரேனில் கிடைப்பதில்லை. அத்துடன், அவ்வழிகளையும், வாகனங்களையும் ரஷ்யாவின் ஏவுகணைக் குண்டுகள் அடிக்கடி தாக்கி அழித்து வருகின்றன.
உக்ரேனின் கருங்கடல் துறைமுகமான ஒடெஸ்ஸாவில் பல கப்பல்கள் தானியங்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கத் தயார் நிலையிலிருக்கின்றன. துறைமுகத்தின் சரக்குகள் பேணும் கட்டடங்களிலும் பெருமளவு தானியம் தேக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்டி உக்ரேனிடம் மட்டுமன்றி, ரஷ்யா, பெலாரூஸ் நாடுகளில் தேங்கியிருக்கும் தானியங்களையும் தேவையான நாடுகளுக்குக் கொண்டுசெல்ல அரசியல் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது ஐ.நா-வின் உணவு, விவசாய அமைப்பு. ஐ.நா-வின் பொதுக் காரியதரிசி குத்தேரஸ் அதுபற்றி ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
உக்ரேன் கைவசமிருக்கும் தானியப் பொருட்கள் ஒடெஸ்ஸா துறைமுககத்தின் ஊடாக விரைவில் ஏற்றுமதி செய்ய வழி செய்யப்படும் என்று ஐ.நா-வின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்