கிரிமியாப் பாலத் தாக்குதலுக்குப் பதிலடியாக ரஷ்ய ஏவுகணைகள் உக்ரேனின் பல நகரங்களிலும் விழுகின்றன.

புத்தின் பெருமையுடன் கட்டித் திறந்துவைத்த கிரிமியாப்பாலத்தில் (The Kerch Bridge)சனியன்று நடந்த தாக்குதலுக்குப் பதிலடியாக உக்ரேனின் நகரங்கள் பல ஞாயிறன்று முதல் ரஷ்யாவினால் தாக்கப்படுகின்றன. திங்களன்று காலையில் உக்ரேன் முழுவதுமே போர்த்தாக்குதல் எச்சரிக்கைச் சங்குகள் முழங்குவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகரான கீயவ் பல மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஏவுகணைக்குண்டால் தாக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யா 2014 இல் கைப்பற்றித் தன்னுடன் இணைத்துகொண்ட கிரிம் தீபகற்பத்துடன் போக்குவரத்துக்காகக் கட்டிய பாலத்தின் மீது நடந்த தாக்குதல் பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதுபற்றி ரஷ்ய ஜனாதிபதி வெளியிட்ட சமூகவலைத்தளப் படம் ஒன்று, “பொதுமக்களுக்கான போக்குவரத்துத் தொடர்பின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்” என்று குறிப்பிட்டிருந்தது. அதைச் செய்தவர்கள் உக்ரேனிய இரகசிய பாதுகாப்புச் சேவையினரே என்றும் அது குறிப்பிட்டது. 

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமாக இருந்த டிமித்ரி மெட்வெடேவ் அத்தாக்குதலுக்குப் பதிலாக ரஷ்யர்கள் எதிர்பார்ப்பதும், உலக வழக்கமும் தீவிரவாதிகள் எங்கிருப்பினும் தேடிப்பிடித்து அழிப்பதே என்று குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்புக் குழுமம் கிரிமியாப்பாலத் தாக்குதலுக்கு என்ன பதிலடி கொடுப்பது என்பது பற்றி விவாதிக்க இன்று கூடவிருக்கிறது.

உக்ரேன் தலைநகர் திங்களன்று காலையில் பல ஏவுகணைக்குண்டுகள் மூலம் ரஷ்யாவால் தாக்கப்பட்டதாக நகரபிதா வித்தாலி கிளிச்கோ அறிக்கை விட்டிருக்கிறார். பல கட்டடங்கள் தாக்கப்பட்டு எரிந்துகொண்டிருப்பதாகச் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயங்கிவந்த கியவ் சுரங்க ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அது மீண்டும் மக்கள் குண்டுகளிலிருந்து தப்ப ஒளிந்துகொள்ளும் மையமாக்கப்பட்டிருக்கிறது. நகரின் முக்கிய வீதிகள் மூடப்பட்டு விட்டன. பாதுகாப்புக் கருதியும், மீட்புப் படைகள் தடையின்றி இயங்குவதற்கு வசதியாக எங்கெங்கே குண்டுகள் போடப்பட்டன என்று வெளியிடப்படவில்லை. இறப்புகள், காயப்பட்டவர்கள் பலரென்றும் குறிப்பிடப்படுகிறது.

நிப்ரோ, ஸப்பொரிச்சா, லிவிவ், ஸிதொமிர், தெர்னிபோல் ஆகிய நகரங்களிலிருந்தும் குண்டுத்தாக்குதல்கள் பற்றிய செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *