பொஸ்னியாத் தேர்தலில் குளறுபடிகள் செய்ததாகப் பொங்கியெழுந்து ஆர்ப்பாட்டம் செய்யும் வாக்காளர்கள்.

இந்த மாத ஆரம்பத்தில் பொஸ்னியாவில் நடந்த தேர்தலின் வாக்குகளைக் கையாள்வதில் ஏமாற்றுவேலைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து மக்கள் இரண்டாவது தடவையாக தமது எதிர்ப்பை ஊர்வலங்கள் மூலம் தெரிவிக்கிறார்கள். அந்த நாட்டின் செர்பிய இனத்தவரின் தலைவர்களில் ஒருவரான ரஷ்ய ஆதரவாளர் மீதே அக்குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

1990 ம் ஆண்டுகளில் பால்கன் நாடுகளுக்கிடையே நடந்த போரின் பின்னர் உண்டாகிய நாடுகளில் ஒன்றான பொஸ்னியா – ஹெர்சகோவினா உலகிலேயே மிகவும் சிக்கலான தேர்தல் முறைகளைகளைக் கொண்டதாகும். 3.2 மில்லியன் மக்களைக் கொண்ட அந்த நாட்டில் வாழும் இனங்களான செர்பர்கள், பொஸ்னியாக்கர்கள், கிரவேஷியர்கள் ஆகியோர்களைக் கொண்ட ஒரு ஸ்திரமான நாட்டை உருவாக்கவே அந்த அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி மூன்றாக அந்த நாட்டின் ஆளும் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு அவைகளை ஒன்றிணைக்கும் ஒரு பாராளுமன்றமும் இருக்கிறது.

செர்பர்கள் செறிவாக வாழும் பிராந்தியத்தின் பலமான அரசியல்வாதியான மிலோராட் டோடிக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்க்கட்சிக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பகிரங்கமாக ரஷ்யாவை ஆதரிக்கும் டோடிக் பொஸ்னியாவின் செர்பியப் பகுதியில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் யலேனா ட்ரேவிச் என்பவரை ஆதரித்தன. டோடிக் வெற்றியை ட்ரேவிச் ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் அறுதி முடிவுகள் அறிவிக்கப்பட முதல் வாக்குகள் மீண்டும் எண்ணப்படவிருக்கின்றன. 

மேற்கு நாடுகளின் எதிர்ப்புகள் இருப்பினும் கூட டோடிக் பொஸ்னியாவின் செர்பியர்களுக்கான பிராந்தியத்தைப் பல வருடங்களாக ஆண்டு வருகிறார். செர்பியக் குடியரசு என்ற பெயரில் அப்பாகத்தைத் தனி நாடாக்கவேண்டும் என்று  குறிப்பிடும் அவருக்கு ரஷ்யா ஆதரவு கொடுத்து வருகிறது. 1992 – 1995 ஆண்டுகளில் அங்கே போர் நடந்ததன் காரணமும் அதுவே. விளைவாக சுமார் 100,000 பேர் இறந்து மில்லியனுக்கும் அதிகமானோர் வெவ்வேறு நாடுகளில் புகலிடம் கோரியிருக்கிறார்கள். 

போர் நிறுத்தப் பிரகடனம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட நாடான பொஸ்னியாவில் வாழும் மூன்று இனத்தினரிடையே தொடர்ந்தும் முழுமையாக நல்லுணர்வு ஏற்படவில்லை. அத்துடன் லஞ்சம், ஊழல் ஆகியவையும் மூன்று பகுதியினரின் ஆட்சியிலும் தலைவிரித்தாடி வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *