டுவிட்டர் வாங்குவதிலிருந்து மஸ்க் பின்வாங்கியதால் அவரை நீதிக்கு முன்னால் இழுக்கிறது டுவிட்டர்.
தனக்கு நிறுவனத்தை விற்பதற்காகப் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் பல விதிகளை டுவிட்டர் மீறிவிட்டதால் அதைக் கொள்வனவு செய்யும் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதாக வெள்ளியன்று எலொன் மஸ்க் அறிவித்திருந்தார். கொள்வனவிலிருந்து பின்வாங்கியதற்காகத் தாம் மஸ்க்கை நீதிமன்றத்தின் முன்னால் இழுக்கப்போவதாக டுவிட்டர் நிர்வாக அதிபர் பிரெட் டெய்லர் குறிப்பிட்டிருக்கிறார்.
தான் பல முறைகள் வேண்டிக் கொண்டபடி டுவிட்டர் நிறுவனம் தன்னிடம் இருக்கும் பொய்க் கணக்குகள் பற்றிய விபரங்களைத் தர மறுத்துவிட்டதாகத் தனது குற்றச்சாட்டில் மஸ்க் சார்பில் குறிப்பிடப்பட்டது. அதைத் தெரிந்துகொள்வது நிறுவனத்தை இயக்குவது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு அவசியம் என்று காரணம் காட்டப்பட்டிருக்கிறது. அத்துடன் டுவிட்டர் தன்னிடமிருந்த பல உயர்மட்டத் திறமைகளையும் பதவியிலிருந்து விலக்கியிருப்பதால் நிறுவனத்தின் மதிப்புக் குறைந்துவிட்டதாகவும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் ஒவ்வொன்றையும் 52.20 டொலருக்கு மஸ்க் வாங்குவதாக ஒப்பந்தமிடப்பட்டிருந்தது. அதன் பங்குகளின் பெறுமதி வீழ்ந்து 34.58 டொலராகக் குறைந்தது.
மஸ்க்குக்கு டுவிட்டர் கொடுத்த விபரங்களின்படி 5 % டுவிட்டர் கணக்குகளே போலியானவை என்பது நிரூபிக்கப்பட்டால், கொள்வனவு ஒப்பந்தத்திலிருந்து விலகியதற்காக டுவிட்டருக்கு 1 பில்லியன் டொலரை நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டியிருக்கும். எப்படியாயினும் மஸ்க்கின் பின்வாங்கல் டுவிட்டருக்கு ஒரு பலமான வர்த்தக உதையே என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்