இவ்வருட ஹஜ் யாத்திரையாளர்களுக்கான சவால்களில் 42 ° செல்சியசும் சேர்ந்திருக்கிறது.
கொரோனாக் காலகட்டத்தின் பின்னர் முதல் முதலாக ஒரு மில்லியன் பேர் பங்குபற்றும் புனித யாத்திரை அங்கே வந்திருப்பவர்களுக்குக் காலநிலை மாற்றங்களிலொன்றை மனதில் பதியத்தக்கதாக பதிக்கிறது. மெக்காவின் பாரிய பள்ளிவாசலிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் மீனா பள்ளத்தாக்கின் கூடாரங்களில் தங்கியிருக்கிறார்கள். வெள்ளியன்று அவர்கள் அரபாத் மலையில் கூடி நாள் முழுவதையும் குரான் ஓதுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டபடி அங்கேயே செலவிடுவார்கள். தூதுவர் முஹம்மது அங்கேதான் தனது கடைசிப் பிரசங்கத்தைக் கொடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
அங்கே வரும் முஸ்லீம்கள் ஐந்து யாத்திரிகை நாட்களையும் திறந்த வானத்துக்குக் கீழேயே தொப்பியெதுவுமின்றிக் கழிக்கவேண்டும். பெண்கள் தமது தலையை துணித்துண்டு ஒன்றால் மறைத்திருக்க வேண்டும். பங்குபற்றுகிறவர்களுக்கு எப்போதுமே சவாலாக இருக்கும் இதுபற்றி அவர்கள் முனகிக்கொள்வதுண்டு. இவ்வருடமோ வழக்கமான சவால்களை விட 42 ° செல்சியஸ் வெப்பநிலையும் சேர்ந்து யாத்திரிகர்களை வாட்டுகிறது.
இஸ்லாமிய நாள்காட்டியால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் புனித யாத்திரிகை நாட்கள் 2017 முதல் சவூதி அரேபியாவின் வருடத்தின் அதி வெம்மையான காலகட்டத்திலேயே வருகிறது. நாட்டின் சூழல் ஆர்வலர்கள் இதைச் சுட்டிக்காட்டி உலகம் படிம எரிபொருட்களைப் பாவிப்பதை நிறுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.
கிரீன்பீஸ் அமைப்பின் மத்திய கிழக்கு நிர்வாகி குறிப்பிடுகையில் “வளைகுடா நாடுகள் தற்போது அனுபவித்து வரும் படு மோசமான வெப்பநிலை விரைவில் வழக்கமான காலநிலை ஆகிவிடும். உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் வெப்பநிலை உயர்வு சில பிராந்தியங்களில் மிக அதிகமாக இருக்கும். சவூதி அரேபியா போன்ற நாடுகளில் கோடை மாதங்களில் வெளியே நிகழ்ச்சிகளை நடத்த முடியாது போகும். ஹஜ் யாத்திரையையும் நடத்தவியலாது போகும்,” என்கிறார்.
உலகின் அதி மோசமான வெப்பநிலையைத் திறந்த வெளியில் எதிர்கொள்ளும் எவரும் நீரிழப்பு, வெப்பத்தாக்கல் அதிர்ச்சி, இருதய நோய் ஆகியவற்றுக்கு உள்ளாகலாம். இந்த நிலைமையை எதிர்பார்த்து சவூதிய அதிகாரிகள் பல நூற்றுக்கணக்கான மருத்துவசாலை இடங்களை யாத்திரிகர்களுக்காகத் தயார் செய்திருக்கிறார்கள். பாரவண்டியொன்று யாத்திரிகர்களுக்குக் குடைகளையும், குடி நீரையும், காற்றாடியொன்றையும் வழங்கி வருகிறது.
யாத்திரிகர்கள் குழுமியிருக்கும் மினா நகருக்கான பருவ நிலை பற்றி அவர்களுக்கு அடிக்கடி எச்சரிக்கையை வானிலை அறிவுப்பு அதிகாரம் கொடுத்து வருகிறது. நாளின் குறிப்பிட்ட சமயங்களில் திறந்த வெளியில் இருப்பதைத் தவிர்க்கும்படி அவ்வெச்சரிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்