துனீசிய ஜனாதிபதி தொடர்ந்து நாட்டின் அதிகாரங்களில் பெருமளவைக் கைப்பற்றத் திட்டம்.
அராபிய வசந்தத்தின் பின்னர் ஜனநாயகம் கொஞ்சமாவடு துளிர்த்த ஒரேயொரு நாடு துனீசியா. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் அங்கே ஜனாதிபதியாகப் பதவியேற்ற காய்ஸ் சாயித் படிப்படியாக அதிகாரங்களைக் கைப்பற்றினார். பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு நாட்டில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாகப்போவதாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள், நாட்டு மக்கள் எதிர்ப்புக்களுக்கு இடையே தன் திட்டப்படி புதிய அரசியல் திட்டத்தை வகுத்து இம்மாத இறுதியில் நாட்டு மக்களிடையே வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கிறது.
காய்ஸ் சாய்த் தயாரித்த புதிய அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு எல்லையில்லாத அதிகாரங்களைக் கொடுக்கிறது. அதனால் நாட்டில் அதற்கெதிரான எதிர்ப்பு வலுத்தது. அந்தச் சட்டங்களில் சிறு மாற்றங்களை மட்டும் செய்து முன்வைக்கவிருக்கிறார் சாய்த். அவ்விபரங்கள் வெள்ளியன்று வெளியிடப்பட்டிருக்கின்றன.
அரசியலமைப்புத் திருத்தங்களை வரைய நியமிக்கப்பட்டிருந்த குழுவின் தலைவர் தாம் செய்த திருத்தங்கள் மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். வெளியிடப்பட்டிருக்கும் அரசியலமைப்பானது ஆட்சியைக் கைப்பற்றுபவர் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படும் ஆபத்தை உண்டாக்கும் என்று எச்சரித்து வருகிறார்.
“துனீசியா ஒரு இஸ்லாமியச் சமூகத்தைக் கொண்ட நாடு. அங்கே இஸ்லாத்தின் கோட்பாடுகளை நிலைநாட்ட அரசு செயற்படவேண்டும்,” என்று வரையப்பட்டிருந்த அரசியலமைப்பு, “ஜனநாயகத்தின் எல்லைகளுக்குள் செயற்படவேண்டும்,” என்று திருத்தப்பட்டிருக்கிறது.
2014 இல் நாட்டில் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனத்தை சாய்த் மாற்ற விரும்புகிறார். அந்தச் சாசனமானது பாராளுமன்றத்துக்கும், ஜனாதிபதிக்கும் இடையே அதிகாரத்தைப் பகிரும் வகையில் இருந்தது. லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டிருக்கும் பல அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் அந்த அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் இயக்கங்களை ஸ்தம்பிக்க வைத்திருந்தது.
சாய்த் கொண்டுவர விரும்பும் அரசியலமைப்புச் சட்டமானது ஜனாதிபதியின் கையில் நிறைவேற்றும் அதிகாரங்களைக் கொடுத்துப் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பூதக்கண்ணாடி வைத்துத் தேடவைக்கிறது. வாக்காளர்களில் ஒரு சாரார் சாய்த் திட்டங்களை விரும்புகிறார்கள். இன்னொரு சாராரும் எதிர்க்கட்சிகளும் அவை மூலம் சாய்த் தனக்கு வேண்டாதவர்களை ஒடுக்கவும், சர்வாதிகார அதிகாரங்களைப் பெறவும் பயன்படுத்த எண்ணுகிறார் என்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்