ஐக்கிய ராச்சியம் போலவே அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்ப டென்மார்க் ஒப்பந்தம் தயார்.
தமது நாட்டுக்கு அகதிகளாக வருபவர்களை ருவாண்டாவில் அகதிகள் முகாமுக்கு அனுப்பும் திட்டமொன்றை ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில் டென்மார்க் – ருவாண்டா ஆகிய நாடுகள் கைச்சாட்டிருக்கின்றன. இது பற்றிய எண்ணங்கள் 2021 லேயே இரண்டு நாடுகளாலும் பரஸ்பரம் வெளியிடப்பட்டன. ருவாண்டா தற்போது ஒப்பந்தத்தில் தாம் டென்மார்க்கிலிருந்து வரும் அகதிகளை ஏற்கத் தயார் என்று குறிப்பிட்டிருக்கிறது.
டென்மார்க்கின் எல்லைக்குள் வந்து அகதிகளாக விரும்புகிறவர்களை அவரது விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் சமயத்தில் அந்த நபரின் நாட்டைவிட இன்னொரு நாட்டிற்கு அனுப்பி அங்கே வாழவைப்பது பற்றி டனிஷ் அரசு 2021 லிருந்தே விரும்புகிறது. அதுபற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதாக ஆளும் சோஷியல் டெமொகிரடிக் கட்சி குறிப்பிட்டு அதற்கான ஆதரவை பாராளுமன்றத்திலும் பெற்றிருக்கிறது.
ஒழுங்காகச் செயற்படக்கூடிய அகதிகள் முகாமை நாட்டுக்கு வெளியே அமைப்பது தற்போது பிரச்சினையாகியிருக்கும் உள்ளூர் அகதிகள் கையாளும் நிலைமைக்கு ஒரு மாற்று என்கிறது டென்மார்க். அப்படியான ஒரு தீர்வு மூலம் டென்மார்க் எதிர்நோக்கும் அகதிகள் பிரச்சினையை நீண்டகாலத்துக்குத் தாம் தீர்க்க விரும்புவதாக அரசு குறிப்பிட்டிருக்கிறது. அதற்காக ருவாண்டாவின் கிகாலியில் ஒரு காரியாலயம் தயாராகியிருப்பதாக ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
டென்மார்க்கின் அகதிகள் நல்வாழ்வு அமைச்சர், வெளிநாட்டுக் அமைச்சின் முக்கிய அதிகாரி ஆகியோர் தற்போது ருவாண்டாவில் இத்திட்டம் பற்றிய விபரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். வெள்ளியன்று அவர்கள் ருவாண்டாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளுடன் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு தமது திட்டங்கள் பற்றி அறிவித்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்