காவலில் இருக்கும்போது இளம் ஈரானியப் பெண் இறந்ததால் ஈரானில் மக்கள் போராட்டம்.
ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரானின் ஒழுக்கக் கண்காணிப்புப் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டிருந்த மாஷா அமினி என்ற பெண் காவலில் இருக்கும்போது வெள்ளியன்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மருத்துவசாலையின் முன்னால் மக்கள் குவிந்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதையடுத்து அவளது இறப்பைப் பற்றி ஆராயும்படி அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தெஹ்ரானிலும் மக்கள் அரசையெதிர்த்துக் குரலெழுப்பி வருகிறார்கள். “உங்களுக்கு வெட்கமில்லை!”, “சர்வாதிகாரியே ஒழிந்து போ” போன்ற கோஷங்களுடன் மக்கள் கூட்டம் குவிந்திருக்கும் படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றன. சமீப வாரங்களில் ஈரானின் பெண்ணுரிமை அமைப்புகள் நாட்டுப் பெண்களை ஹிஜாப் அணியாமல் தமது மறுப்பைக் காட்டும்படி கோரிவருகிறது.
மாஷா அமினி கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டபோது தலையில் ஏற்பட்ட காயமொன்றால் உணர்ச்சிகளெதுவுமின்றிக் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வேறொரு ஊரிலிருந்து குடும்பத்துடன் தெஹ்ரானுக்குச் சென்றபோது 22 வயதான அவள் ஈரானின் ஒழுக்கம் கண்காணிக்கும் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டாள்.
சாள்ஸ் ஜெ. போமன்