குட்டி ஐஸ்லாந்தில் தீவிரவாதத் தாக்கலுக்குத் திட்டமிட்டவர்களை பொலீசார் கைது.
உலகிலேயே குற்றங்கள் மிகவும் குறைந்த நாடுகளிலொன்று ஐஸ்லாந்து. அந்த நிலபரத்தைக் குழப்புவதாக புதன்கிழமையன்று நாட்டின் பொலீசார் பல இடங்களில் நடத்திய அதிரடிச் சோதனைகள் மூலம் 30 வயதைச் சுற்றியுள்ள நால்வரைத் தீவிரவாதத் தாக்குதலொன்றை நடத்தத் திட்டமிட்டதாகக் கைது செய்திருக்கிறார்கள்.
பொலீசார் நடத்திய சோதனைகளில் தானியங்கித் துப்பாக்கிகளும், பகுதி தானியங்கித் துப்பாக்கிகளும் அவைகளுக்கான வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன. அவை நாட்டின் தலைநகரான ரெய்க்காவிக்கின் இரண்டு வெவ்வேறு புறநகர்ப்பகுதியின் கட்டடங்களில் இருந்தன.
தீவிரவாதத் தாக்குதல்கள் எந்தக் காரணத்துக்காக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தன என்ற விபரங்களைப் பொலீசார் வெளியிடவில்லை. சமூக நல நிர்வாகங்கள், பாராளுமன்றம், பொலீஸ் நிலையங்கள் மற்றும் சில நபர்கள் மீது குறிப்பிட்ட தாக்குதல்கள் நடாத்தப்பட இருந்ததாக மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலீசார் கடந்த பல வாரங்களாகவே கண் வைத்திருந்து, கவனித்து வந்திருந்ததாகத் தெரிகிறது. தாக்குதல்களுக்காக அவர்கள் ஒரு பகுதி ஆயுதங்களை 3D மூலம் தயாரித்திருந்ததாகவும் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்