வெறுப்பு வேண்டாம்| பொறுப்பு வரட்டும்
வெறுப்பு என்ற நான்கெழுத்து வார்த்தை, மனித வாழ்க்கையை கறுப்பாக்கக்கூடியது.
அதனால் மற்றவர்களை நீங்கள் வெறுக்கக்கூடாது.
உங்களையும் நீங்கள் வெறுக்கக்கூடாது. வெறுப்பு, உங்கள் மீதே உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.
மற்றவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டால் நீங்கள் பாதிக்கப்படுவதோடு, சமூகமும் பாதிக்கப்படும்.
வெறுப்பு ஒருவருக்கு தோன்ற ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
தான் எதிர்பார்த்தபடி மற்றவர்கள் நடக்காமல் போனால், தான் ஆசைப்பட்டது மற்றவர்களுக்கு கிடைத்துவிடும்போது, மற்றவர்கள் பார்வையில் தனது மரியாதை குறைந்து போகும்போது வெறுப்பு வரும்.
சந்தர்ப்ப சூழ்நிலை தன்னை குற்றவாளியாக்கும்போதும், தனக்கு பிரியமானவர்கள் எதிராளியாகும் போதும், சவாலை எதிர்கொள்ள போதிய பலம் இல்லாதபோதும் வெறுப்பு தோன்றுவதுண்டு.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் தோல்வியடையும் போதும் வெறுப்பு உருவாகலாம்.
உண்மையான உழைப்பு மற்றவர்களின் சூழ்ச்சியால் விரயமாகும் நிலையிலும், நேர்மை தோற்றுப்போகும் நிலையிலும், திறமை இருந்தும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காத போதும் வெறுப்பு ஏற்படலாம்.
தன்னை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளும்போதும் வெறுப்பு தோன்றுவதுண்டு.
இன்னொருவர் மீதோ, ஒரு குழு மீதோ உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டாலும், உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு தோன்றினாலும், அந்த வெறுப்பை உடனே உங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். அது அப்படியே உங்கள் மனதில் தங்கிவிட்டால் அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும்.
மற்றவர்கள் மீது காட்டும் காரணமற்ற வெறுப்பு அவர்களை உங்களைவிட்டு விலகச் செய்துவிடும். உங்களை தவறான முடிவுகள் எடுக்கவும் தூண்டிவிடும்.
வெறுப்பு நம் மனதிலே இருந்துகொண்டிருந்தால், அதன் மோசமான விளைவுகளை நாம் அறிய சில காலம் பிடிக்கும்.
ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற வெறித்தன எதிர்பார்ப்பில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், அந்த குழந்தை மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பு நாளடைவில் அந்த குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து விடும்.
அந்த மனப்பான்மை குழந்தையை பலமிழக்கச்செய்து, அதனை சமூகத்தில் பின்தங்கச்செய்துவிடும்.
அதனால் காலங்கள் கடந்த நிலையில், ‘தேவையில்லாமல் குழந்தையை வெறுத்து விட்டேனே’ என்று நினைத்து தந்தையும் தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகி விடுவதுண்டு.
காரணமின்றி வெறுத்துத் தள்ளப்படும் குழந்தைகள், பிற்காலத்தில் சமூகவிரோதிகளாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.
மனோதத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, சிறுவயது சூழ்நிலைகளே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.
தேவையின்றி வெறுத்து ஒதுக்கப்படும் குழந்தைகள் தடம் மாறி இரக்கமற்ற செயல்களை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஆகவே உங்கள் குழந்தைகள் மீதோ, சமூகத்தின் மீதோ ஒருபோதும் வெறுப்பைகாட்டாதீர்கள்.
எழுதுவது ; மண்ணச்சநல்லூர் பாலசந்தர்